சென்னை தியாகராய நகரில் பல வருட ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்.. அடியோடு மாறிய தெருக்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக மிலிட்டரி ரூல் போல் அதிரடி காட்டி வருகிறார்கள். தயவு தாட்சண்யம் இன்றி மாநகரம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். அந்த வகையில் தியாகராய நகரில் பல வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்புகளை ஒரே நாளில் அகற்றி உள்ளனர். இதனால் தெருக்களே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளன.
தியாகராய நகரை போல் ஆக்கிரிமிப்பு உள்ள பகுதி எதுவுமே சென்னையில் இல்லை .. சென்னையில் எல்லா பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளது என்றாலும், திநகரில் மிக அதிகம். அதற்கு காரணம்.. சென்னையில் வணிக மையமாக தியாகராய நகர் இருப்பது தான்.

ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், சிவபிரகாசன் தெரு, ஜிஎன் செட்டி சாலை, வெங்கட் நாராயண சாலை, வடக்கு உஸ்மான் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகள் என பல பகுதிகளிலும் ஒரு காலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பாண்டி பஜாரில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு தனியாக நடைபாதைகள் வியாபாரிகள் கடைகள் அமைக்கப்பட்டன. அங்குதான் பாண்டிபாஜாரில் ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் தற்போது கடை வைத்துள்ளனர். அடுத்ததாக உஸ்மான் ரோட்டில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறைப்படுத்தப்பட்டன. அங்கு கடைகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்றப்பட்டன. அதேநேரம் சிவபிரகாசன் தெரு உள்பட சில பகுதிகளில் இன்னும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அண்மைக் காலமாக சென்னை முழுவதும் உள்ள ஆக்கிரிமிப்புகளை அகற்ற நடவடிக்கை ரெய்டு நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகளாக பெயர் பெற்ற ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ராணுவம் போல் கடும் நடவடிக்கைகளில் கடந்த இரண்டு வாரங்களாக செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தியாகராய நகரில் சிவப்பிரகாசன் தெரு தி நகர் பாதசாரி பிளாசாவிற்கு பக்கத்தில் உள்ளது, இங்கு நடைபாதை உள்ளது என்பது கூட தெரியாத அளவுக்கு பல ஆண்டுகளாக நடைபாதைகளில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல் சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பாதைகளும் நடைபாதை வியாபாரிகளால் மூடப்பட்டிருந்தது. இவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அடியோடு அகற்றி உள்ளனர். சாலையில் செல்பவர்கள் இப்போது நடைபாதையில் எளிதாக நடக்கலாம். அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்ட பிறகு தெருக்கள் மொத்தமாக மாறி உள்ளது. இப்போது ஆக்கிரமிப்புகள் என்பது சுத்தமாக இல்லை. திநகரில் மட்டுமல்ல எலியட்ஸ் கடற்கரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications