அடடே ‘செம’ தூள்.. அரசுப் பள்ளியா இது? கலர்ஃபுல்லாக ஸ்மார்ட்டாக மாறும் மாநகராட்சி பள்ளிகள்!
அரசுப் பள்ளியா இது என ஆச்சரியப்படும் அளவுக்கு கலர்ஃபுல்லாக, ஸ்மார்ட்டாக மாறியுள்ளன சென்னை மாநகராட்சி பள்ளிகள்.
சென்னை : சென்னையில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிய மேசை நாற்காலிகள், எல்.இ.டி டிவி, மின்விசிறி, இணையதள வசதி, வண்ணமயமான ஓவியங்கள் என வகுப்பறைகள் செம ஸ்மார்ட்டாக உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்பும் பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்
சென்னை மாநகராட்சியின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3,013 ஆசியர்கள் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடல் பள்ளிகளை ஆய்வு செய்து அதேபோல, தமிழ்நாட்டிலும் செயல்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

நவீன வசதிகள்
அதன்படி, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய மேசை நாற்காலிகள், எல்.இ.டி டிவி, மின்விசிறி, வண்ணமயமான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கிளாஸ் ரூம்
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து "சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்" என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, சென்னை பள்ளிகளை பல பரிமாணங்களில் முழுமையாக மாற்றும் முயற்சியாகும். சென்னை பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திட CITIIS, நமக்கு நாமே திட்டம், ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் (CSR Fund) பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உறுதுணையாக உள்ளன.

10 பள்ளிகள்
இதன் தொடர்ச்சியாக, சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு வருடத்திற்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைத்திட ரூ.56,60,100 மொத்த மதிப்பீட்டில் டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் CSR நிதியில் ரூ.28,87,500- மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி அறிவிப்பு
சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மென்மேலும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications