ஸ்கெட்சில் மிஸ்ஸான வெள்ளைகாளி.. விடாமல் துரத்தும் 20 ஆண்டு பகை! ரத்தசரித்திரமான அதிமுக - திமுக மோதல்
சென்னை: பெரம்பலூர் அருகே காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீசார் மீது பெரம்பலூர் திருமாந்துறை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் ஸ்கெட்ச் மிஸ்ஸானது. இந்நிலையில் யார் வெள்ளைக் காளி? போலீஸ் இருக்கும் போதே தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? 20 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப் பழி கொலைகளுக்கு என்ன காரணம்? என பார்க்கலாம்..
மதுரையைச் சேர்ந்தவர்பிரபல ரவுடி வெள்ளை காளி. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், பெரம்பலூர்- திருமாந்துறை அருகே இந்த அதிரடி தாக்குதல் நடந்துள்ளது.
சாப்பிடுவதற்காக எஸ்கார்ட் வாகனம் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே, பின்னால் தொடர்ந்து வந்த இரண்டு கார்களில் இருந்து ஒரு ரவுடி கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டை வீசியது. அதிர்ஷ்டவசமாக, வெள்ளை காளிக்கு உயிர் சேதம் ஏற்படாமல் போலீசார் அவரை காப்பாற்றினர்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு
ஆனால், அதில் திருப்தி அடையாத அந்த கும்பல், அரிவாள்களுடன் நேரடியாக தாக்க முயன்றது. இந்த சம்பவத்தில் மூன்று காவலர்கள் காயமடைந்தனர். சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போகும் நிலையில், எஸ்கார்டுக்கு தலைமை தாங்கிய எஸ்.ஐ துப்பாக்கிச் சூடு நடத்த, தாக்குதலாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது. போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும் இவ்வளவு திட்டமிட்ட தாக்குதல் எப்படி சாத்தியமானது? யார் இந்த வெள்ளை காளி? ஏன் இவரை கொல்ல இத்தனை ஆண்டுகளாக முயற்சிகள் தொடர்கின்றன?
வெள்ளை காளி மீது தாக்குதல்
இந்த கதையின் வேர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் செல்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் அரியமங்கலத்தைச் சேர்ந்த வி.கே. குருசாமி ஆகிய இருவரும் நெருங்கிய உறவினர்கள். மறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன் மதுரை மேல அனுப்பானடி பகுதியில் குடியேறினர். காலப்போக்கில், இருவரும் அரசியல் ஆதரவுகளுடன் தனித்தனியான அதிகார மையங்களாக வளர்ந்தனர்.
பழிக்குப் பழி கொலைகள்
வி.கே. குருசாமி திமுகவுடன் நெருக்கம் கொண்டவர். கட்டப்பஞ்சாயத்து, நில விவகாரங்களில் செல்வாக்கு பெற்றிருந்தார். ராஜபாண்டி அதிமுக ஆதரவாளராக இருந்து வந்தார். மதுரை கிழக்கு பகுதியில், கட்சி கொடி கட்டுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற விஷயங்களிலேயே இரு தரப்புக்கும் மோதல்கள் வெடித்தன. 2003-ஆம் ஆண்டு, ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த சின்ன முனுசு கொலை செய்யப்பட்டதுதான் இந்த ரத்தப்பகையின் தொடக்கப் புள்ளி.
மதுரை ரவுடி அரசியல்
அதற்கு பழிவாங்கும் வகையில், முனுசாமியின் தம்பியும் ராஜபாண்டி ஆதரவாளருமான வெள்ளை காளி, 2008-ஆம் ஆண்டு வி.கே. குருசாமி தரப்பைச் சேர்ந்த மூன்று பேரை கொலை செய்தார். அதன்பிறகு, ஒரு கொலைக்கு ஒரு கொலை என்ற பழிவாங்கும் சங்கிலி முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்தது. 2015, 2016, 2017 என தொடர்ந்து இரு தரப்பிலும் கொடூர கொலைகள் நடந்தன. ஒருவரின் மகன், மற்றொருவரின் மருமகன், உறவினர்கள் என எந்த வரம்பும் இன்றி தாக்குதல்கள் நடந்தன. இந்தச் சம்பவங்களில், சமூக சமாதானம் பேச முயன்ற அரசியல்வாதிகள், காவல்துறையினரின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
பல ஆண்டு பகை
ஒருகட்டத்தில், பணம் கொடுத்து சமாதானம் செய்யலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், வெள்ளை காளியின் பதில், இந்த பகை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை காட்டியது. பணம் வேண்டாம்; எதிர்தரப்பு உயிர் வேண்டும் என்ற பதிலே அந்த முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. 2023-ஆம் ஆண்டு, வி.கே. குருசாமி பெங்களூருவில் கொலை முயற்சியில் தப்பிய பின், வெளியில் வராமல் இருந்து வருகிறார்.
வெள்ளை காளி
இதற்கிடையே, வெள்ளை காளி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ஆனால், சிறையிலிருந்தே கூலிப்படை மூலம் குற்றங்களை இயக்குவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வெள்ளை காளி மீது தற்போது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு கிளாமர் காளி கொலை வழக்கிலும் அவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
பழிக்குப் பழி கதை
இந்த பின்னணியில்தான், நேற்று நடந்த பெரம்பலூர் தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுகிறது. போலீஸ் வாகனத்தை திட்டமிட்டு பின்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை நேரடியாக கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இத்தகைய ரவுடி அரசியல் சம்பவங்கள், அரசுக்கும் காவல்துறைக்கும் கடும் சவாலாக மாறியுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த 20 ஆண்டு பழிக்குப் பழி கதைக்கு முடிவு எப்போது வரும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications