சென்னை பேருந்தில் மயக்க மருந்து உணவு தந்து நகைகளை திருடிய ராணி.. உல்லாச வாழ்க்கை.. சிக்கியது எப்படி
சென்னை: சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜானகி என்ற பெண்ணிடமும், வேளச்சேரியை சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணிடமும், பேருந்தில் பயணித்தபோது, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி இருவரும் தாம்பரம் போலீசில் புகார் அளித்தனர். இதை விசாரித்த தனிப்படை போலீசார், பஸ்களில் பயணம் செய்யும் வயதான பெண்களை குறி வைத்து மயக்க மருந்து கொடுத்து நகைகளை பறித்த கள்ளக்காதல் ஜோடியை அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜானகி பேருந்தில் பயணித்த போது, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறிக்கப்பட்டிருந்தது. இதேபோல் வேளச்சேரியை சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணிடமும் பஸ்சில் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுபற்றி இருவருமே தாம்பரம் போலீசில் புகார் அளித்தனர். இதேபோல் நசீமா என்ற பெண் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வந்த மாநகர பஸ்சில் பையில் வைத்திருந்த 13 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் அளித்தார்.

இந்த புகார்கள் தொடர்பாக தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் விசாரிக்க உத்தரவிட்டார். இதன்படி இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் பேருந்தில் நகைகளை பறிக்கும் கும்பல்கள் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
தாம்பரம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி (வயது 54), அவருடைய நண்பர் பரமேஸ்வரன் (52) ஆகிய இருவரும் இந்த வேலையை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 10 பவுன் தங்க நாணயத்தை கைப்பற்றினார்கள்.
இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில், ராணியும், பரமேஸ்வரனும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள், பல்வேறு திருட்டுகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்திருக்கிறார்களாம். இவர்களின் மீது ஏற்கனவே தாராபுரம், திருச்சுழி, பழனி, கரூர், திருச்சி, கண்டோன்மென்ட் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருக்கிறதாம்.
இவர்கள் இருவரும் தம்பதி போல் நடித்து தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்களில் நோட்டமிட்டு தனியாக பயணம் செய்யும் வயதான பெண்களை குறிவைக்கிறார்களாம். பின்னர் அவர்களுடன் பஸ்சில் பயணம் செய்தவாறு பேச்சு கொடுத்து, கோவில் பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுப்பார்களாம். அவர்கள் மயக்கம் அடைந்த பிறகு நகைகளை திருடிக்கொண்டு தப்பி செல்வார்களாம்.
இது மட்டுமல்லாமல் பஸ்களில் விற்கப்படும் வெள்ளரிக்காய், மாங்காய் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்வது போல நடித்து கண் இமைக்கும் நேரத்தில் மிளகாய் பொடி தடவியிருக்கும் பகுதியில் மயக்க மருந்தையும் தடவி கொடுத்து நூதன பாணியிலும் நகைகளை பறித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்களாம். பஸ்களில் திருடும் நகைகளை உடனடியாக நகைக்கடைகளில் விற்று தங்க நாணயங்களாக மாற்றியும், புதிய நகைகளை வாங்கியும் வந்திருக்கிறார்கள். பின்னர் அதனை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுப்படுகிறது. இந்த கள்ளக்காதல் ஜோடி எந்தெந்த மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications