தென்காசி வாத்தியார் வழக்கு.. நீதிமன்றம் நோட்டீஸ்.. கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை வார்னிங்
சென்னை: நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொடக்கக்கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் கோர்ட்டுகளில் அதிகம் நிலுவையில் உள்ளன, இந்த கோர்ட்டு வழக்கு விசாரணை சார்ந்த பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஓய்வூதியம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதன் மீது தீர்ப்பும் வந்துள்ளது. அந்த தீர்ப்பு மீது 6 மாதங்களுக்கு பின்னர் கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவாகரம் சர்ச்சையாகி உள்ளது.
இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வி துறையின் தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்புகளின் மீதான மேல்முறையீடு உள்ளிட்ட செயல்பாடுகளில் மாவட்ட, வட்டாரக்கல்வி அதிகாரிகள் காலதாமதமாக செயல்படுவதால், நீதிமன்றத்தின் கூடுதல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே இதன் மீது கூடுதல் பொறுப்புடன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும்.
நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளில் மெத்தனமாக செயல்படும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தொடர்புடைய பணியாளர்கள் மீது துறைசார்ந்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இந்த விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தனிக்கவனத்துடன் செயல்பட வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்ககங்கள், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை பிறப்பித்திருக்கிறார்..
இதில் சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கடபிரியாவும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தியும், நியமிக்கப்பட்டுள்ளார்கள். காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமாவும், வேலூர் மாவட்டத்துக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பழனிசாமியும், மதுரை மாவட்டத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகனும் உள்பட 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications