நீர்நிலைகளை ஆக்கிரமித்தால்.. கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.. விளாசி தள்ளிய நீதிபதிகள்
சென்னை: சிவகாசி வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையத்தை அமைக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என்றும் பழங்கால நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு மாநிலத்தின் கடமை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவகாசியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் "சிவகாசி பகுதியில் அமைந்துள்ள வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையத்தை (micro compost centre) அமைக்கச் சிவகாசி நகராட்சி நடவடிக்கை எடுத்தது.

ஊரணி அழியும் அபாயம்
இதனால் வேலாயுதம் ஊரணி முழுவதுமாக அழியும் அபாயம் உள்ளது. நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டிடங்களும் கட்ட கூடாது எனச் சட்டம் உள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்தப் பிரச்சினையில் நான் சமர்ப்பித்த மனுவை எட்டு வாரங்களில் பசிரீலனை செய்யச் சிவகாசி நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

விசாரணை
ஆனால் உரிய விசாரணை இல்லாமல் வேலாயுத உளரணியில் நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அது செயல்பட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கண்களை மூடிக்கொண்டு இருக்காது
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. இருக்கும் பழங்கால நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு மாநிலத்தின் கடமை. இதுபோன்ற நீர் நிலைகளுக்கும், இயற்கைக்கும் அறங்காவலராக மாநிலங்கள் தான் இருக்க வேண்டும்.

உத்தரவு
மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் புறம்போக்கு இடமாக முதலில் மாற்றப்பட்டு, அதன் பிறகு நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் நுண்ணிய உர மையத்தினால் நீர்நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது இதனை சிவகாசி நகராட்சி உறுதி செய்ய வேண்டும். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications