ஆந்திரா உட்பட.. 4 மாநிலங்களில் அடுத்த வாரம் டிரைலர்.. கொரோனா தடுப்பூசிக்கு ரெடியாகும் இந்தியா
சென்னை: வல்லரசு நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி டிரையல் 4 மாநிலங்களில் நடக்க உள்ளது.
ஏற்கனவே, நாடு முழுக்க மாநில அளவிலான பயிற்சியை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளித்துள்ளது மத்திய அரசு. பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்த லட்சத்தீவு தவிர்த்து பிற பகுதிகளில் 7 ஆயிரம் பேருக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

17831 பிளாக்குகளில் 1399 இல் தடுப்பூசி குழு பயிற்சிகள் முடிக்கப்பட்டுள்ளன. பிற பிளாக்குகளில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என 4 திசைகளிலும் ஒரு மாநிலங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொரோனாவுக்கான தடுப்பூசி கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதை உறுதிபடுத்த இந்த ஒத்திகை அவசியப்படுகிறது. கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை அறிவித்துள்ள நிலையில், எந்த மருந்தை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பையும் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு முனைப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications