நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைப்பு! "மிகவும் மனிதாபிமான செயல்" என சான்றிதழ்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (100) நேற்று காலமானதை அடுத்து அவரது உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
கடந்த 1 ஆம் தேதி நல்லகண்ணுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் வழக்கமாக அனுமதிக்கப்படும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கடந்த 23-ஆம் தேதி இரவு முதலே பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று மதியம் 1.55 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
நல்லகண்ணு தனது இறப்புக்கு பிறகு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு நல்லகண்ணு தெரிவித்திருந்தார். அதன்படி அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பதற்காக நேற்றைய தினம் எம்பார்மிங் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் திநகரில் உள்ள பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்திக், சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்
அஞ்சலி செலுத்தினர்.
அது போல் இன்று மதியம் வரை அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைப்பதற்காக வாகனம் தயாராக இருந்தது.
அப்போது இறுதி அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஸ்டாலின், நல்லகண்ணு உடல் அருகே சென்று வீரவணக்கம் வீரவணக்கம் என முழங்கினார். இதையடுத்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.
இதையடுத்து திநகரில் இருந்து நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் நல்லகண்ணுவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவமனையில் நல்லகண்ணுவின் உடலை பெற மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதையடுத்து அங்கு மாலை 6 மணிக்கு வந்த நல்லகண்ணுவின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டதற்கான சான்றிதழை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications