Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பர் 1 தமிழ்நாடு அமைப்பு தினத்தை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்- சிபிஎம் கே. பாலகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாகாண பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்ட நாளில் தமிழ்நாடு அமைப்பு தினத்தை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிரில் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரை: ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேர்தல்' என ஒன்றிய பாஜக அரசு கூட்டாட்சி அமைப்பு முறையின் மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பெயரை பாடத்திட்டத்திலும், அரசு நிர்வாகத்திலும் 'பாரத்' என பெயர் மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்கி, கூட்டாட்சி தத்துவத்தை சின்னாபின்னமாக்கி வருகிறது. கிடைத்த ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய வரலாற்றுச் சக்கரத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி சுழற்றிச் செல்ல முயற்சிக்கிறது.

 CPI(M) urges to Tamil Nadu Govt should Celebrate Nov 1 as State Formation Day

இந்திய வரலாற்றில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவானதும், தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலம் உருவானதும், அம்மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டப்பட்டதும் சாதாரணமாக நடந்தது ஒன்றல்ல. எண்ணற்ற போராட்டங்களுக்கும் அளப்பரிய தியாகங்களுக்கும் பின்னால் பெற்ற சாதனைகளாகும். இச்சாதனை வரலாற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாகும்.

பழந்தமிழர் நாடு: "வடவேங்கடம், தென்குமரி, ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்" என தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. இருந்தாலும் தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பு முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. கடந்த காலங்களில் தென்பாண்டிய நாடு, வேணாடு, குட நாடு, குட்ட நாடு, பூழிநாடு, பாண்டிநாடு, புனல்நாடு, பன்றி நாடு, அருவாநாடு, மலாடு என பல நாடுகளாக அமைந்திருந்தது. பிற்காலத்தில்,மூவேந்தர்கள் ஆண்டபோதும் பல உபநாடுகளாகப் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய நாடு ஒருங்கிணைக்கப்பட்டு தங்களது சுரண்டல் தேவைக்கு வசதியாக மூன்று மாகாணங்கள் அமைக்கப்பட்டன. மன்னராட்சிப் பகுதிகளும் தொடர்ந்தன. 1937 ஆம் ஆண்டில் மாகாணங்களின் எண்ணிக்கை 11 ஆக்கப்பட்டது. இருப்பினும் இம்மாகாணங்கள் மொழி, பண்பாடு உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல் வெறும் நிர்வாக அமைப்பாகவே இருந்தன.

விடுதலைப் போராட்ட முழக்கம்: வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப்போராட்டம் கருக்கொண்ட காலத்தில் மொழி உரிமைப் போராட்டங்கள் எழுந்தன. விடுதலை முழக்கங்கள், எழுச்சிமிகு கவிதைகள், அந்தந்த தாய்மொழியில் உரக்க முழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி தனது மாநில அமைப்புகளை மொழிவழி அமைப்புகளாக அமைத்திட 1920ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென குரல்கள் எழுந்தன. மொழிவழி மாநிலங்களை அமைத்திட வேண்டுமென 1946ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் மொழிவழி மாநிலங்கள் அமைத்திட கம்யூனிஸ்ட்டுகள் நாடு முழுவதும் பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

விசால ஆந்திரா: தெலுங்கு பேசும் பகுதிகளில் 'விசால ஆந்திரா' அமைக்க வேண்டுமென தோழர் பி. சுந்தரய்யா தலைமையிலும், மலையாள மொழிப் பகுதிகளை ஒருங்கிணைத்து 'நவ கேரளம்' அமைத்திட இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலும், 'வங்காளம்', 'மகாராஷ்ட்டிரம்' என நாடு முழுவதும் மாநிலங்கள் அமைத்திட வேண்டும் எனவும் போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கி நடத்தினர். 'ஐக்கிய தமிழகம்' வேண்டுமென்ற போராட்டத்தை தோழர்கள் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்தார்.

காங்கிரஸ்: விடுதலைக்கு முன் மொழி வழி மாநிலங்களை அமைக்க வாக்குறுதி கொடுத்த காங்கிரஸ், ஆட்சிக்கு வந்த பின் அந்த கோரிக்கையினை நிறைவேற்ற மறுத்து விட்டது. இன்னொருபக்கம் விடுதலைப்போராட்டக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மொழிவழி மாநிலங்கள் அமைவதை கடுமையாக எதிர்த்தது. விடுதலைக்குப் பின்னர் ஜனசங்கத்தின் தேர்தல் அறிக்கையில் "கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என பிரகடனப்படுத்துவோம்" என குறிப்பிட்டது.

ஆந்திரத்தின் போராட்டம்: இத்தகைய சூழ்நிலையில் தேசிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்க வேண்டுமென குரல்கொடுத்த ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகும். இதற்காக நாடு முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்தியது. ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு 65ஆவதுநாளில் உயிர் துறந்தார். இதன்விளைவாக போராட்டங்கள் தீவிரமடைந்தன. அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த உயிர்ப்பலிகளுக்கு பின்னரே ஆந்திர மாநிலம் தனியாக அமைக்கப்படுமென 1952ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தெலுங்கு பேசும் அனைத்து பிரதேசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த வெற்றியை சென்னை மாகாண சட்டமன்றத்தில் உற்சாகத்தோடு வரவேற்று பேசிய தோழர் பி. ராமமூர்த்தி "ஆந்திர மக்கள் அடைந்த வெற்றி நமது நாட்டு மக்கள் சுதந்திரத்தையும் - ஜனநாயகத்தையும் நோக்கி நடைபோடுவதில் ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். .... இன்று ஆந்திர ராஜ்ஜியம் அமையப்போவது நாடெங்குமே மொழி வழி ஆட்சிகள் அமைவதை நோக்கி முன்னேறுவதில் முதல்பெரும் வெற்றியாக திகழப்போகிறது" என குறிப்பிட்டார்.

ஐக்கிய தமிழகம் கோரிக்கை: ஆந்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கொச்சி-திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்திருந்த தமிழகப் பிரதேசங்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை பகுதிகளையும் வேறு பல பிரதேசங்களோடு இணைந்திருந்த பகுதிகளையும் இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு 11 பேர் பலி,1000 பேர் படுகாயம்: கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டத்தில் மார்ஷல் நேசமணி இணைந்தார். தோழர்கள் ப. ஜீவானந்தம், ஜி.எஸ். மணி, டி. மணி உள்ளிட்டோர் தலைமையில் நடத்திய போராட்டத்தின் மீது அப்போதைய முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை காவல்துறையை ஏவி கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர். ஐக்கிய தமிழகம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பி ஆண்டு சி மில் தொழிலாளர்கள் உள்பட 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இப்பேரணி மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன், கே. முத்தையா, தமிழரசுக் கட்சி தலைவர் ம.பொ. சிவஞானம் உள்ளிட்டு 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பசல் கமிஷன்: போராட்டம் இந்திய நாடு முழுவதும் தீவிரமடைந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு "பசல் கமிசன்" அமைத்தது. அக்குழு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அமைத்திட பரிந்துரையை வழங்கியது. இப்பரிந்துரை அடிப்படையில் 1956 நவம்பர் 1ஆம் தேதி தமிழ்ப்பிரதேசங்களை முழுமையாக கொண்ட தனி மாநிலம் 'சென்னை மாகாணம்' என்ற பெயரில் அமைக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்கள் ஒரே ஆட்சி நிர்வாக அமைப்பின் கீழ் வாழும் நிலைமை முதன்முறையாக ஏற்பட்டது வரலாற்றுச் சாதனையாகும். இந்த வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு வைரவரிகளால் எழுதப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்: இவ்வாறு உருவான சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் 1952ஆம் முதல் குரல்கொடுத்தது மட்டுமின்றி, இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்திருத்தத்தை முன்மொழிந்தவர் தோழர் பி. ராமமூர்த்தி ஆவார். இத்தீர்மானத்தின் மீது அவையில் வாதாடிய பெருமை தோழர் பூபேஷ் குப்தாவைச் சாரும். நாடாளுமன்றத்தில் இத்தீர்மானத்திற்கு அறிஞர் அண்ணா ஆதரவு தெரிவித்து பேசினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தது.

தமிழ்நாடு அமைப்பு தினம்: பின்னர் 1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்தகைய நீண்ட, நெடிய வரலாற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் தமிழ்நாடு அரசு நவம்பர் 1ஆம் தேதி மாநில அமைப்பு தினத்தை சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+