ஜிஎஸ்டி குறித்து முறையிட்டது குற்றமா? நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்! சிபிஐ வலியுறுத்தல்
சென்னை: கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவக உரிமையாளர் பேசியிருந்த விஷயம் பெரும் கவனம் பெற்றிருந்தது. இது குறித்து அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மட்டுமல்லாது, இதற்காக நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஒரு மாதிரியான ஜிஎஸ்டி குறித்து வலியுறுத்தியிருந்தார்.

அவர் பேசியதாவது, "உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ எங்களுடைய ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க. ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் உள்ள வைக்குற கிரீம்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது.
அவங்க வரும்போதெல்லாம் ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடுவது, காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள், பன்னை கொண்டா.. அதில் கிரீமை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
கடை நடத்த முடியவில்லை மேடம். இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை, ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
நிர்மலா சீதாராமனுக்கு விவரம் தெரியாது.. அதை மறைக்கதான் நைசாக கோபப்படுவார்: கார்த்தி சிதம்பரம்
ஏற்கெனவே ஜிஎஸ்டி குறித்து, சிறுகுறு மற்றும் நடுத்தர வணிகர்களிடையே பல்வேறு சலசலப்புகள் இருந்து வந்திருந்தது. இப்படி இருக்கையில், சீனிவாசனின் இந்த பேச்சு மொத்த வணிகர்களின் மனவேதனையையும் கொட்டி தீர்த்ததை போல இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே சீனிவானின் பேச்சுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. சோஷியல் மீடியாக்களில் இவரது பேச்சு பரவலாக ஷேர் செய்யப்பட்டது.
ஆனால் மறுநாள், சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவர் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்,
“ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (12.09.2024) கோவை நகரில் உள்ள கொடிசியா கூட்ட அரங்கில் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி வரி ஏழை மக்கள் பகுதியினரையும், உணவகம் போன்ற சிறு தொழில் செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை எளிய முறையில் எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளை சீரமைத்து, சிறு வணிகம் மற்றும் தொழில் பிரிவுகளுக்கு முற்றிலும் விலக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இந்தப் பொது நிகழ்வு சமூக ஊடகங்களில் விரிவாக பரவி நாட்டின் கவனத்தை ஈர்த்தது.
அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சுட்டிக்காட்டிய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் முறையீட்டை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ஒன்றிய நிதியமைச்சர், அவரது ஆதரவாளர்கள், அதிகார வர்க்கத்தினர் அன்னபூர்ணா உணவக உரிமையாளரை தனியாக, நிதியமைச்சர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.
ஒன்றிய நிதியமைச்சரின் கலந்தாலோசனைக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? அங்கு நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டது குற்றமா? முறையீடு குறித்து வாய் திறக்காத நிதி அமைச்சர், தவறான வரி விதிப்பை திருத்தியமைக்க முன் வராமல், முறையிட்டவரை தனித்து அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சமாகும் .
பங்கு சந்தை வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் செபி நிறுவனத்தின் தலைவரும், அவரது வாழ்க்கை இணையரும் அதானி நிறுவனத்துடன் இணைந்து செய்துள்ள முறைகேடு பற்றி எழுந்துள்ள புகார் குறித்து வாய் திறக்காத நிதியமைச்சர், சாதாரண உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்ததை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்திய ஒன்றிய நிதியமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications