24 நாள் போராட்டத்திற்கு பிறகு! விடைபெற்றார் நல்லகண்ணு! சென்னை மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் (101) உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.
வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நல்லகண்ணு.

அவரது உடல்நிலை கடந்த திங்கள்கிழமை இரவு முதலே பின்னடைவை சந்தித்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அவரது மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சொல்லி வந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் அவரது உடல் நிலையில் மேலும் பின்னடைவை சந்தித்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதலே அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் செயற்கை சுவாசம் உள்ளிட்ட கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர இன்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை ஏற்கெனவே மோசமடைந்திருப்பதை அறிந்ததும் கடந்த இரு நாட்களாக மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் இருந்தனர்.
அவரது இறப்பை அறிந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
நல்லகண்ணு தனது இறப்புக்கு பிறகு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு நல்லகண்ணு தெரிவித்திருந்தார். அதன்படி அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.
நல்லகண்ணுவின் உடல் அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது அவர் உடல் என்பாமிங் செய்யப்பட்டு வருகிறது.
நாளை அவருடைய உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக, அதாவது நல்லக்கண்ணுவின் உடல் தானமாக கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications