ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.. குறைவானது என்ற குறை இருக்கிறது.. கே பாலகிருஷ்ணன் பளீச் பேட்டி
சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் குறைவானது என்ற குறை இருக்கிறது என்றாலும் பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிக்க திமுக தலைமையிலான கூட்டணியுடன் பயணத்தை தொடருவோம் என்று சிபிஐஎம் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வரும் சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது பற்றி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்த நேர்காணல்..

கேள்வி: திமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்றுள்ள உங்களது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எந்த மாதிரியான நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கிறது?
பதில்: எங்களது முதல் குறிக்கோள் மதவெறி பிடித்துள்ள பாஜக, அதிமுக கூட்டணியை முறியடிப்பதற்காக, திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அந்த அணியை வீழ்த்துவதற்காக திமுக தலைமையில் கூட்டணி, தொகுதி உடன்பாடு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. நாட்டைப் பிடித்துள்ள மிகப்பெரிய ஆபத்து ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜக. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை, ஒரு ஆளுநரைப் பயன்படுத்தி, 5 வருடங்களாக செயல்படாத அளவிற்கு அலைக்கழித்து, அதனை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்துள்ளனர். சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வந்தால்கூட ஒட்டுமொத்தமாக தமிழகச் சூழலை மாற்றுவார்கள்.
பாஜகவுக்கு ஒத்து ஊதும் அதிமுக ஆட்சியால் தமிழகத்தின் வளர்ச்சி, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற எதைப்பற்றியும் கவலைப்படாத ஆட்சியாக உள்ளது. எனவே திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் என்பதை மகிழ்ச்சியாக ஏற்கிறோம்.
கேள்வி: தொகுதி பங்கீடு உடன்படிக்கை தாமதமாக காரணம் என்ன?
பதில்: தொகுதி பங்கீடு உடன் படிக்கையில் தாமதம் என்று இல்லை. தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டது. 1-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 8-ஆம் தேதி தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை ஒப்பந்தமானது. மற்றதை ஒப்பிடும்போது இது மிக விரைவாக தான் நடந்துள்ளது.
கேள்வி: கேட்ட அளவுக்கான இடங்களை பெறமுடியாமல் போனது உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் வருத்தமா?
பதில்: ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என எண்ணுவது இயல்புதான். கடந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டுள்ளோம். கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போதுள்ள 6 தொகுதி என்பது குறைவானது தான். குறைவானது என்ற குறை இருக்கத்தான் செய்கிறது. இதற்காக வேறொரு அரசியல் கட்சியுடன் போக முடியாது. பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிக்க, அதற்காக திமுக தலைமையிலான கூட்டணியுடன் பயணத்தை தொடருவோம்.
கேள்வி: 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வெவ்வேறு கூட்டணி என்பது ஆரோக்கியமானதா?
பதில்; ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு அரசியல் சூழ்நிலை என்பது வேறு. அரசியல் சூழ்நிலைகள் மாறும் போது மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் என்பது கட்டாயம் தேவை. காலத்திற்கேற்ப அரசியல் யுத்திகளை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது.
கேள்வி: 6 தொகுதிகளைப் பெற்றது குறைவாக இருந்தால், அது தேர்தல் பணியில் சுணக்கமாக எதிரொலிக்குமா?
பதில்: எதிர்பார்ப்பதை விட, எண்ணிக்கையில் குறைவாக உள்ளது என்பது குறையாக இருந்தால் கூட உடன்பாடு எப்போது செய்யப்பட்டதோ, அப்போது முதல் அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு வலுவாக செயல்படுவோம். பாஜக-அதிமுக கூட்டணியை முறியடிக்கும் போராட்டத்தில் முன்னணி படையாக செயல்படுவோம்.
6 தொகுதிகள் என்பது எங்களுடையதாக இருந்தால் கூட, 234 தொகுதியிலும் கூட்டணி வெற்றி பெற எங்களது தோழர்கள் களத்தில் ஈடுபட்டுள்ளனர். கம்யூனிஸ்ட்கள் என்றுமே கொள்கை போராட்டத்தில் தளர்ந்தவர்கள் அல்ல.
கேள்வி: நீங்கள் போட்டியிடுவீர்களா? எந்தெந்த தொகுதியில் போட்டியிட விருப்பம்??
பதில்: மாநில செயலாளர்கள் போட்டியிட முடியாது. போட்டியிட வாய்ப்பும் இல்லை.
கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க. மற்றும் மார்க்சிஸ்ட் அனைவருக்கும் 6 தொகுதிகளை திமுக சமமாக ஒதுக்கியுள்ளது, உங்களை திமுக கூட்டணியாகத் தான் பார்க்கிறார்களா அல்லது மக்கள் நலக் கூட்டணியாகவே பார்க்கிறார்களா?
பதில்: ஒவ்வொரு தேர்தலில், ஒவ்வொரு கூட்டணி அமையும் போது அடுத்த தேர்தலில் அதே கூட்டணி என்று பார்ப்பதில்லை. ஏற்கனவே 2011-இல் அதிமுக கூட்டணியில் இருந்தோம், 2006 திமுக கூட்டணியில் இருந்தோம். 2011-இல் நீங்கள் திமுக கூட்டணி என்றா அதிமுக பார்த்தது? 2011-இல் அதிமுக கூட்டணி. 2016-இல் மக்கள் நல கூட்டணியில் இருந்தோம். தற்போது திமுக என்ற மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்துள்ளோம். இப்போது மக்கள் நல கூட்டணி என்று பார்ப்பதற்கான சூழ்நிலையே இல்லை.
கேள்வி: பிரச்சாரத்திற்கு எப்போது புறப்படுவீர்கள்?
பதில்: 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்ய வேண்டியுள்ளது. அநேகமாக 13, 14 தேதிக்கு மேல் பிரச்சாரத்திற்குச் செல்ல உள்ளோம்.
இவ்வாறு, கே.பாலகிருஷ்ணன் கேள்விகளுக்கு பதிலளித்தார்..












Click it and Unblock the Notifications