"ஸ்பெஷல் டீமை" இறக்குங்க.. அப்ப பாலேஸ்வரம், இப்ப விழுப்புரமா?.. கொடூர சித்ரவதை: சிபிஎம் பாலகிருஷ்ணன்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை கேட்கிறார் சிபிஎம் பாலகிருஷ்ணன்
சென்னை: விழுப்புரம் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஎம் கட்சி வலியுறுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இங்கு தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களையும், பெண்களையும் பாலியல் வன்கொடுமைகள் செய்ததுடன், குரங்குகளை ஏவிவிட்டும் கடிக்க வைத்துள்ளனர்.
குரங்குகளால் தாக்கப்பட்டு பலர் உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி உள்ளது. ஜன்னல் கம்பிகளில் சங்கிலியால் கட்டிப்போட்டு, போதை பொருளை தந்து பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர்.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இந்த பெண்களுக்கு ஏற்பட்டுள்ளன..

ஆசிரம ஓனர் கைது
ஆசிரமத்தில் இருந்து இப்போதைக்கு 142 பேரை மீட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்தவர்களில் 86 பேர் சிகிச்சை முடிந்து வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இந்த ஆசிரம ஓனர் உட்பட 5 பேர் கைதாகி உள்ளனர்.. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.. இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

சித்ரவதை
அந்த அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக உள்ளிட்டு பல மாநிலங்களிலிருந்து 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதும், பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மாடு மேய்க்க விடுவது
இந்த மனிதாபமற்ற கொடுஞ்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜோதி ஆசிரமம் உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யாதவர்களை சங்கிலியால் அடித்து சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கருணை இல்லம்
பெண்கள் - சிறுமிகளை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்முறைகளும் செய்துள்ளனர். இங்கு தங்கியிருந்த 16க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். 2018ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த கருணை இல்லத்தில் பல மனநோயாளிகள், முதியவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணியில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனையானது.

ஸ்பெஷல் டீம்
எனவே, இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாலியல் வன்முறைகள் குறித்தும், காணாமல் போயுள்ளவர்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு விசாரணை அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு சிறப்புக்குழுவை ஏற்படுத்தி முறைப்படுத்திட வேண்டும்" என்று பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications