நடிகர் சூர்யாவை மிரட்டி பாஜக தீர்மானம்...கோழைத்தனத்தின் வெளிப்பாடு - சிபிஎம் பாலகிருஷ்ணன் பொளேர்
நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ள செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் நடிகர் சூர்யா தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 மசோதாவை நடிகர் சூர்யா எதிர்த்திருந்த நிலையில் அவரை கண்டித்தும், அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாஜக இளைஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியது. பாஜகவின் தனி நபர் எதிர்ப்பு நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, கடந்தாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள ஒரு சில அம்சங்களை படைப்பாளிகள், திரையுலகினர் எதிர்த்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா பதிவு
இந்த மசோதாவை எதிர்த்து திரைத்துறையில் முதலில் நடிகர் சூர்யா குரல் கொடுத்தார், அவரைத்தொடர்ந்து வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல... இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

சூர்யாவிற்கு எதிராக தீர்மானம்
ஏற்கெனவே நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக சூர்யாவின் விமர்சனத்தால் கோபமடைந்திருந்த பாஜகவினர் நேற்று இளைஞரணி கூட்டத்தில் சூர்யாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றினர். பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானமாக நடிகர் சூர்யாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட ரீதியாக நடவடிக்கை
நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருகிறார். மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காக தொடர்ந்து எதிர்க்கிறார்.
நடிகர் சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சூர்யா மீது எதிர்ப்பு ஏன்
பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து, விமர்சனம் வைக்கும் நிலையில் நடிகர் சூர்யா மீது மட்டும் எதிர்ப்பைக் காட்டுவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

சூர்யாவை மிரட்டுவதா?
திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.

அடக்குமுறை கும்பல்
விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறைக் கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் எச்சரிக்கை.

வன்மையான கண்டனம்
தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்து உரிமைக்கும் எதிராக செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராக பாய்ந்துகொண்டிருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல் எனவும் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications