40% காப்பரா? ஸ்டெர்லைட்டின் குரலாக பேசும் ஆர். என் ரவி.. ஆளுநரின் பேச்சுக்கு கொதித்தெழுந்த சிபிஎம்!
சென்னை: நாட்டின் ஒட்டுமொத்த காப்பர் உற்பத்தியில் 40%ஐ பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் தூண்டிவிடப்பட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதாவது இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்தாலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 300 மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நாட்டின் ஒட்டுமொத்த காப்பர் உற்பத்தியில் 40%ஐ பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் தூண்டிவிடப்பட்டனர்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, "நாட்டின் வளர்ச்சியை தடுக்க சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை என்று பல்வேறு காரணிகளை கூறி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த போராட்டங்களுக்கான நிதியானது வெளிநாடுகளிலிருந்து வருகிறது. இதனை தடுக்கதான் மத்திய அரசு எப்.சி.ஐ-ஐ முறைப்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் ஆண்டுக்கு ரூ.250 வரை வெளிநாட்டு நிதிகள் வந்து குவிந்தன.
40 சதவிகித காப்பர்: அதேபோல கேரளாவில் விளிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் வருத்தமானதுதான். ஆனால் இந்த ஆலை நாட்டின் ஒட்டுமொத்த காப்பர் உற்பத்தியில் 40%ஐ நிறைவு செய்தது. இதற்கு எதிராக மக்கள் தூண்டிவிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு ஆலை மூடிப்பட்டது" என்று கூறியிருந்தார். இதனையடுத்து இவருடைய இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
வரலாறு தெரியாதா?: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக பேசியதாவது, "தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டு விரோதமான கருத்துக்களை ஆளுநர் பதவியில் இருந்துக்கொண்டு தொடர்ந்து கூறி வருவது முறைகேடான செயலாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு என நீண்ட வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு எல்லாம் அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி, அதை 100 நாட்கள் தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டமாக நடத்தி அதன் முடிவாக 100வது நாளில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது நமக்கு நன்றாக தெரியும்.

அபராதம்: இது மோசமான துப்பாக்கிச்சூடு, காவல்துறையினர் குருவிகளை சுடுவதை போல போராட்டக்காரர்களை சுட்டனர் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது மக்களை தூண்டிவிட்டுதான் ஆலையை மூடிவிட்டார்கள் என்று ஆளுநர் சொல்கிறார் எனில், யார் மக்களை தூண்டிவிட்டது? ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்தான் மக்களை தூண்டிவிட்டது. இந்த ஆலைதான் மக்களை இப்பகுதியில் வாழ விடாமல் காற்றையும், தண்ணீரையும், நிலத்தையும் விஷமாக்கி மக்களுக்கு பல நோய்களை உருவாக்கியது ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள்தான். இந்த கழிவுகளை முறையாக பராமரிக்க பல உத்தரவு போட்டும் நிர்வாகம் அதை மதிக்கவில்லை. இதனால் நீதிமன்றம் ரூ.100 கோடி அபராதம் கூட விதித்திருந்தது.
மனித உயிரை விட முக்கியமா?: ஆக இப்படியாக கடைசி நிலையில்தான் மக்கள் போராட்டங்கள் நடத்தினர். ஆனால் அப்போதைய அதிமுக அரசு அதை தொடக்கத்தில் கண்டுக்கொள்ளாமல் இறுதியாக துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை கொன்று குவித்தது. இப்படி இருக்கையில் ரம்மி நிர்வாகத்தின் குரலாக பேசிய ஆளுநர் தற்போது ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் குரலாக பேசுகிறார். தற்போது ஆளுநர் 40% காப்பர் இந்தியாவிற்கு இந்த ஆலையின் மூலமாகதான் கிடைக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், மக்களின் உயிரரை விட இந்த 40% காப்பர்தான் முக்கியமா? என்பதுதான் தற்போதைய கேள்வி. எனவேதான் இந்த ஆலை குஜராத்திற்கு சென்றபோது மக்கள் அதனை அனுமதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications