கண்துடைப்பு ஆய்வு! கடமை தவறும் அதிகாரிகள்? காற்றில் பறக்கும் பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிமுறைகள்!
சென்னை: எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி படத்தில் இடம்பெற்றுள்ள ''ஒரு நாள் போவார்.. ஒரு நாள் வருவார்.. ஒவ்வொரு நாளும் துயரம்'' என்ற பாடல் வரிகளுக்கேற்ப உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலில் தான் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி, 13 பேர் பலி என்பதை பலரும் ஒரு நாள் தலைப்புச் செய்தியாக கடந்து போகலாம். ஆனால் அதில் தாய், தந்தையை பறிகொடுத்துவிட்டு எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கும் குழந்தைகளை பற்றி நம்மில் பலரும் சிந்தித்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது பட்டாசு வெடி விபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம், பட்டாசு உற்பத்தியில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கும் அதிகாரிகள் அனுமதிகளை வாரி வழங்கி வருவதேயாகும்.

என்னென்ன விதிகள்?: பட்டாசு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு பாதுகாப்பு விதிகளை வகுத்துள்ளது. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
*லைசென்ஸில் குறிப்பிட்டுள்ள அளவின் படி மட்டுமே வெடி மருந்துகளை ஆலையில் இருப்பு வைக்க வேண்டும். ஆனால் அதைக் காட்டிலும் மும்மடங்கு வெடி மருந்துகளை இருப்பு வைப்பது தொடர்கிறது.
*பட்டாசு உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக்கூடாது. குறைந்தபட்சம் புதிதாக ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதிகளையாவது செய்து கொடுக்க வேண்டும்.

*பட்டாசு உற்பத்தி பணிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் ஒரே இடத்தில் பலரை பணியமர்த்தக் கூடாது. உதாரணத்துக்கு ஒரு அறையில் 2 பேரை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என அரசின் விதிமுறைகள் கூறினாலும், அந்த அறையில் 8 பேர் வரை பணியமர்த்தும் போக்கு பல இடங்களில் தொடர்கிறது. இதனால் தான் அசம்பாவிதம் ஏற்படும் போதும் உயிர் பலிகளும் அதிகரிக்கின்றன.
* பட்டாசு உற்பத்தி ஆலை அமைக்க இட அமைப்பு மிக மிக முக்கியம். அரசு அறிவுறுத்தியுள்ள உரிமத்தில் கொடுக்கப்பட்டுள்ள இட அமைப்பில் மட்டுமே பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதனை பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

* தீயணைப்பு கலன்களை பயன்படுத்தக் கூடிய வகையில் நிறுவியிருக்க வேண்டும். உரிய காலத்திற்குள் தீயணைப்பான்களை புதுபிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் பல இடங்களில் பெயருக்கு தீயணைப்பான்கள் நிறுவப்பட்டு அதை புதுபிப்பதும் கிடையாது பயன்படுத்தும் அளவுக்கு தொழிலாளர்களுக்கு வழிகாட்டுவதும் கிடையாது.
* மிக முக்கியமாக பட்டாசு உற்பத்தில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. இப்படி பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற எண்ணற்ற விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இவை அனைத்தும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளோ, சம்பிரதாய ஆய்வு நடத்தி கண்துடைப்புக்கு கணக்கு காட்டுவதன் விளைவே இது போன்ற பட்டாசு ஆலை வெடி விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது.












Click it and Unblock the Notifications