பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் காந்தி..சிஆர்பிஎப் பரபர கடிதம்! பாஜக - காங்., இடையே வார்த்தைப் போர்
புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிஆர்பிஎப் கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜக - காங்கிரஸ் இடையே கருத்து யுத்தமும் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவருமான ராகுல்காந்தி கடந்த சில ஆண்டு இடைவெளியில் பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். குறிப்பாக இத்தாலி, வியட்நாம், துபாய், கத்தார், லண்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த பயணங்களில் பல தடவைகள் அவசியமான பாதுகாப்பு விதிமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும், இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சிஆர்பிஎப் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு கடிதம் எழுதியுள்ளது.

ராகுல் காந்தி
மேலும், ராகுல் காந்திக்கும் தனியாக கடிதம் அனுப்பியுள்ள நிலையில், தாங்கள் பாதுகாப்பு விதிகளை மீறுவது மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடித்தத்தில், ராகுல் காந்தி 'Z+' எனும் மிக உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கிறார். அவருக்கு Advance Security Liaison (ASL) என்ற சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர் எந்தப் பயணத்தையும் மேற்கொண்டாலும், அதற்கு முன் சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தருவது கட்டாயம்.
சிஆர்பிஎப் கடிதம்
குறிப்பாக வெளிநாட்டு பயணங்களுக்கு முன்பே முழு விவரங்களையும் பகிர வேண்டும். ஆனால் பலமுறை அவர் இந்த விதிகளை பின்பற்றவில்லை. மிக உயர் பிரிவு பாதுகாப்பு பெற்றவர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், முழு பாதுகாப்பு அமைப்பும் பாதிக்கப்படும். இது எதிர்பாராத ஆபத்துகளை உருவாக்கும்" என்று சிஆர்பிஎப் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளது. மேலும், 'மஞ்சள் புத்தகம்' எனப்படும் நடைமுறைகளின் படி, மிக உயர்ந்த பாதுகாப்பு பெற்றவர்கள் தங்கள் ஒவ்வொரு பயணத்தையும், உள்நாடு, வெளிநாடு என்று பிரிக்காமல், பாதுகாப்பு அமைப்புக்கு முன்னதாகத் தெரிவிக்க வேண்டும்.
பாதுகாப்பு விதிகள்
அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி இந்த விதிகளை தொடர்ந்து பின்பற்றாமல் இருப்பதால் தற்போது மீண்டும் எச்சரிக்கை எழுந்துள்ளது. தற்போது மட்டுமல்ல, முன்னதாகவே ராகுல்காந்தி பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தது குறுப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிஆர்பிஎப், ராகுல் காந்திக்கும் கார்கேவுக்கும் தனித்தனியாக 10ம் தேதி செப்டம்பர் அன்று கடிதம் அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகள்
சிஆர்பிஎப் VVIP பாதுகாப்புத் துறை தலைவர் சுனில் ஜூன் அனுப்பிய கடிதத்தில், "ராகுல் காந்தி தன் பாதுகாப்பை மிகச் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அவர் வெளிநாடு செல்லும் போது யாருக்கும் தெரிவிக்காமல் செல்கிறார். இதனால், பாதுகாப்பு நடைமுறைகள் பாதிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணம்
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி வரை இத்தாலியிலும், மார்ச் 12 முதல் 17 வரை வியட்நாமிலும், ஏப்ரல் 17 முதல் 23 வரை துபாயிலும், ஜூன் 11 முதல் 18 வரை கத்தாரிலும், ஜூன் 25 முதல் ஜூலை 6ஆம் தேதி வரை லண்டனிலும், செப்டம்பர் நான்கு முதல் 8ஆம் தேதி வரை மலேசியாவிலும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நாட்களில் தான் அவர் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என சிஆர்பிஎப் கூறியுள்ளது.
பாஜக காங்கிரஸ்
இந்த நிலையில் கடிதம் தொடர்பாக சிஆர்பிஎஃப் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாதுகாப்பு விஷயங்களில் ராகுல் காந்தி கவனமின்றி செயல்படுவதாக, பாஜக இந்த விஷயத்தை ராகுலுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் சிஆர்பிஎப்பின் இந்த கடிதம் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை எனவும், ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குறித்த பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை திசை திருப்ப முயற்சி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications