தீவிரமெடுக்கும் டவ்-தெ புயல்.. விடாமல் பெய்யும் கனமழை.. கர்நாடகாவில் 4 பேர், கேரளாவில் 2 பேர் பலி!
சென்னை: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தெ புயல் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டவ்-தெ புயல் காரணமாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் மையம் கொண்டு உள்ள இந்த டவ்-தெ புயல் தற்போது வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
டவ்-தெ புயல் அதி தீவிர புயலாக இன்று காலை உருவெடுத்தது. வரும் செவ்வாய்க்கிழமை மேற்கு குஜராத்தில் உள்ள பாவ்நகர் அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா
இந்த புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சியை மலையை ஒட்டிய பகுதிகள், அரபிக்கடல் அருகே உள்ள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, எர்ணாகுளம் கோட்டையம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இந்த புயல் காரணமாக மழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை
முக்கியமாக கொச்சியில் நினைத்ததை விட பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. கொச்சியில் இருக்கும் செல்லனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடல் அலை கொந்தளிப்பு ஊருக்குள் வந்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளம்
இந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் நேற்று மட்டும் 140 மிமீ மழை பெய்து உள்ளது. இன்னொரு பக்கம் கர்நாடகாவிலும் கடந்த 4-5 மணி நேரமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர கர்நாடக மாவட்டங்களில் பலவற்றில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கர்நாடகா
கர்நாடகாவில் மொத்தம் 12 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மலநாடு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து தீவிரமாக மழை பெய்து வருகிறது. உத்தர கர்நாடகா, ஷிவமொக்கா, குடகு, ஹசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.

மரணம்
இதனால் கர்நாடகாவில் இதுவரை பெய்த மழையில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். ஷிவமொக்கா, குடகு, ஹசன் சில வீடுகள் மழையில் இடிந்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாளை மாலை வரை கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications