ஈஸ்ட் இந்தியாவை எதிர்த்தவர்கள் யார்?..ஆர்.எஸ்.எஸ் எதிர்த்ததா..? - டி.ராஜா ரியாக்ட்
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்திருக்கிறது. வரலாறு காணாத வகையில் ஆளும் அரசுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்துள்ளது காங்கிரஸ்.
கூட்டணி அமைத்தது மட்டும் அல்ல; அந்த அணிக்கு 'இந்தியா' என்று சிறப்பான பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அதற்குப் பதிலடி தரும் வகையில் 'என்.டி.ஏ' என்ற பழைய பெயருக்கு புதிய உயிரைக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது பாஜக. அதன் தொடர்ச்சியாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பற்றி எரியும் மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்காமல், 'இந்தியா' என்ற பெயரை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

'ஈஸ்ட் இண்டியன் கம்பெனி' பெயரில்கூட 'இந்தியா' இருந்தது என்ற அவர், 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற பெயரிலும் 'இந்தியா' இருந்து என்று சர்ச்சையைக் கிளப்பும்படி ஓர் உதாரணத்தை முன்வைத்தார்.
அவரது பேச்சு பல மட்டங்களில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. அது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி ராஜாவிடம் பேசினோம். அவர் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி குறித்து ஒருபிடிப் பிடித்தார்.
"மோடி பகல் கனவு காண்கிறார். மோடி வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அச்சத்தில் இருக்கிறார். ஆற்றாமையில் இருக்கிறார் என்பதைத்தான் அவரது இந்தப் பேச்சு காட்டுகிறது.

ஒரு கூட்டணி 'இந்தியா' என்ற பெயரில் அழைக்கப்படுவதைக் கண்டே அவர் இப்படி நடுங்குகிறார் என்றால், வரப்போகின்ற தேர்தல் முடிவுகள் குறித்து அவர் எந்தளவுக்கு நடுங்குவார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த 9 ஆண்டுகால ஆட்சி குறித்து மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆகவே வரப்போன்ற தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு எதிராக இருக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அவர் இப்படி அச்சப்பட்டு அவதூறு பேசுகிறார். அபவாதத்தைக் கிளப்பிவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், தரம் தாழ்ந்த இழிவான விமர்சனங்களுக்கு அவர் செல்கிறார்.
கிழக்கு இந்திய கம்பெனி என்றால் பெயரில் 'இந்தியா' இருந்தது. பாப்புலர் ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் பெயரிலும் 'இந்தியா' இருந்தது என்று சில உதாரணங்களைச் சொல்லி மோடி விமர்சித்திருக்கிறாரே?

"மோடி இந்திய நாட்டின் பிரதமர். இந்தியா என்ற நாட்டின் மீது உலக அரங்கில் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதையைக் காப்பாற்றும் கண்ணியத்தோடு, பிரதமர் என்ற பொறுப்புடன் மோடி பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சமீப காலமாக அவர் மிகக் கீழ்த்தரமான கருத்துகளைச் சொல்லி வருகிறார். அதைப்பற்றி அவர் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
இந்தியாவின் குடிமகனாக இருப்பவர்கூட தனது நாட்டைப் பற்றிச் சொல்லும் போது ஒரு நாகரிகமும் கண்ணியமும் வெளிப்படவேண்டும். குடிமகனுக்கே இந்த அளவுகோல் உள்ள போது நாட்டின் பிரதமர் இதைவிட நாகரிகமாகப் பேச வேண்டும் இல்லையா?
அவர் ஈஸ்ட் இண்டியா கம்பெனி பற்றிப் பேசுகிறார். நான் அவரைத் திரும்பிக் கேட்க முடியும். ஆமாம், ஈஸ்ட் இண்டியா கம்பெனி, ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அது இந்தியாவைக் கைப்பற்றி, நாட்டின் அதிகாரத்தையே கைப்பற்றி இந்தியாவைக் காலனிய நாடாக மாற்றியது.

ஆனால், இந்த ஈஸ்ட் இண்டியா கம்பெனி குறித்து அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ன சொன்னது? அந்த கம்பெனியை எதிர்த்துப் போராடுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முன்வந்ததா? அந்த ஆர்.எஸ்.எஸ். இன் பிரச்சாரகராகத்தானே மோடி இருக்கிறார்? ஆகவே கேட்கிறேன். நீங்கள் என்றைக்காவது ஈஸ்ட் இண்டியா கம்பெனியை எதிர்த்தது உண்டா? அந்த கம்பெனியை எதிர்த்துப் போராடியது யார்? நாங்கள் போராடினோம்.
ஆகவே, மோடி எந்த உதாரணத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை, பன்முகத்தன்மையைக் காப்பாற்ற பாஜக என்றாவது முயற்சி செய்திருக்கிறதா? அதுதானே இன்றைக்கு எழுந்துள்ள முக்கிய கேள்வியே?
இன்றைக்கு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இன்றைக்கு இந்தியா என்ற கருத்தாக்கமே அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மோடி என்றைக்காவது பேசியது உண்டா? எங்களுடன் விவாதிக்கத் தயாரா? நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மோடி முதன்முதலாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அதன் வாயிலில் விழுந்து தலைவணங்கிவிட்டு உள்ளே சென்றார். அந்தளவுக்கு மரியாதை செலுத்தியவர் இன்றைக்கு நாடாளுமன்றத்திற்கு வருகிறாரா? நாட்டின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறாரா?
இன்றைக்கு மணிப்பூர் பற்றி எரிகிறது. அதற்குக் காரணம் பாஜக ஆட்சி. மத்தியிலும் மணிப்பூரிலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது. அந்த மக்களுக்குப் பிரச்சினை. 'இரட்டை எஞ்சின் அரசு' எனப் பெருமை பேசிய மோடி விவாதிக்க மறுக்கிறார். பதில் சொல்ல மறுக்கிறார்.

நாடாளுமன்றமே முடங்கிப் போய் உள்ளது. நாடாளுமன்றம் முடங்குகிறது என்றால் அங்கே ஜனநாயகம் செத்துப் போய்விட்டது என்று அர்த்தம்" என ஆவேசமாக தன் கருத்துகளை முன்வைத்தார் டி.ராஜா.
இருந்தாலும் பிரதமருக்கு இந்தியா' மீது இவ்வளவு கோபம் ஆகாது.












Click it and Unblock the Notifications