ராஜ்பவனை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் ஆளுநரின் வேலை! தயாநிதி மாறன் எம்.பி. கிண்டல்!
சென்னை: ராஜ்பவனை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் ஆளுநரின் ஒரே வேலை என்றும் அதனை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் எனவும் தயாநிதி மாறன் எம்.பி. கிண்டல் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமைந்தகரையில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாநிதி மாறன் எல்லோருக்கு சுடச்சுட தனது கையால் சிக்கன் பிரியாணி பரிமாறினார்.

எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லையோ அந்தந்த மாநிலங்களில் எல்லாம் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
ஆளுநர் பதவியை பொறுத்தவரை அது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தானே என செய்தியாளர்களிடம் எதிர்கேள்வி எழுப்பிய தயாநிதி, ராஜ்பவனை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் ஆளுநரின் ஒரே வேலை என்றும் அதனை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் எனவும் கூறி கலாய்த்தார்.
ஆளுநர் திமுக இடையேயான வார்த்தைப் போர் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஆளுநரின் கருத்துக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் திமுக தலைமை சுடச்சுட பதிலடி கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.
ஆளுநர் ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் விரிவாக விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications