ColdRif: கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும்! மா.சுப்பிரமணியன் உறுதி
சென்னை: ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 1ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததும் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருப்பதால் அந்த மாநில சுகாதாரத் துறை தகவல் சொன்னார்கள்.

உடனே தமிழக அரசும் அந்த நிறுவன மருந்தை ஆய்வு செய்து அதில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்து மத்திய பிரதேச அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறைக்கும், ஒடிஸா, புதுவை போன்ற மாநிலங்களுக்கும் இந்த மருந்தில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தகவல் சொன்னோம்.
நச்சுத்தன்மை இருந்தது
ஆனால் மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும், அந்த கோல்ட்ரிப் மருந்தில் தவறு இல்லை என கூறி விட்டுவிட்டார்கள். ஆனால் நாம், இந்த மருந்தில் எந்த அளவிற்கு நச்சுத்தன்மை இருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டு அக்டோபர் 3ஆம் தேதி முதல் அதன் தயாரிப்பை நிறுத்தும் உத்தரவை கொடுத்துவிட்டோம்.
நச்சு ரசாயனம்
இருமல் மருந்தில், டை எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம் கூட இருக்கக் கூடாது. ஆனால், 48 சதவிகிதம் வரை கலந்திருப்பது பெரும் குற்றம். எனவே அந்த நிறுவனத்தில் மேற்கொண்டு மருந்து தயாரிக்க அனுமதி தரவில்லை. 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்தியில் 7ஆம் தேதி நிறுவன உரிமையாளருக்கு கிரிமினல் நோட்டீஸ் கொடுக்கச் சென்றோம்.
உரிமையாளர் தலைமறைவு
அதை வாங்க அங்கு உரிமையாளர் இல்லை. இதனால் நோட்டீஸ் அந்த நிறுவனத்தில் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மருந்து நிறுவனத்திற்கு அவரை அழைத்துச் செல்வார்கள். அங்கு அந்த மருந்தில் கலப்பு இருப்பதற்கான காரணத்தை கேட்பார்கள். அவரது பதிலை பொறுத்து, அந்த ஸ்ரீசன் நிறுவனத்தை நிரந்தரமாக மூட 2 அல்லது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்தின் தரம்
இந்த மருந்தின் தரத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஏன் போய் ஆய்வு செய்யவில்லை என விளக்கம் கேட்டு இரு மருந்து ஆய்வாளர்கள் (Drug Inspectors) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த மருந்துகளை வாங்குவதில்லை. தனியார் மருத்துவமனைகளும் இந்த மருந்துகளை வாங்க வேண்டாம் என தடை விதித்திருக்கிறோம்.
தவறு இல்லை என்ற மத்திய அரசு
அந்த மருந்தில் எந்த தவறும் இல்லை என மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும் தெரிவித்தார்கள். ஆனாலும் தமிழக அரசு அந்த மருந்தை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் பல்வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆலை பூட்டப்பட்டிருந்ததால் ஆலைக் கதவில் ஒட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications