மின்சார வாரியத்தின் 'கறுப்புப் பக்கங்கள்'! அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை! நிர்மல் குமார் அதிரடி
சென்னை: தமிழக மின்சார துறையின் தற்போதைய நிதிநிலை குறித்து அடுத்த வாரத்தில் வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
"தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் என்னென்ன மாயாஜாலங்கள் அரங்கேறின என்பதை ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது" - செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் குரலில் அத்தனை வேகம்; வார்த்தைகளில் அத்தனை தீவிரம்.

தமிழக மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை, கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் மிக விரிவான 'வெள்ளை அறிக்கை' (White Paper) அடுத்த வாரத்தில் தவெக அரசால் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அமைச்சர்.
அமைச்சர் நிர்மல் குமார் கொளுத்திப் போட்ட அந்த 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1. 44,000 டிரான்ஸ்பார்மர்கள்
அமைச்சரின் பிரஸ் மீட்டில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கிய விவகாரம் இதுதான். முந்தைய ஆட்சிக் காலத்தில், மின்சார வாரியத்திற்காகச் சுமார் 44,000 டிரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றிகள்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அநியாய விலைக்குக் கொள்முதல் செய்து இமாலய ஊழல் நடத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, தற்போது தீவிரமான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி அதிகாரிகள் களமிறங்க உள்ளதால், கடந்த காலத்து 'புள்ளிகள்' பலருக்கு இப்போதே வேர்க்கத் தொடங்கியுள்ளது.
2. அடிக்கடி பவர் கட் ஏன்?
"ஏங்க... இப்பலாம் அடிக்கடி கரண்ட் கட் ஆகுது?" என்று அண்மைக்காலமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் ஒரு அதிர்ச்சி உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் மின்வெட்டுகளுக்குப் பின்னால் வெறும் 'தொழில்நுட்பக் கோளாறு' மட்டும் இல்லையாம். மின்சாரத் துறையிலேயே இருந்து கொண்டு உள்வேலை பார்க்கும் ஒருசில 'கறுப்பு ஆடுகளின்' கைவரிசையும், கடந்த ஆட்சியில் உள்கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்காமல் விட்டதுமே முக்கியக் காரணங்களாம். அதிர்ச்சி என்னவென்றால், இதற்குப் பின்னணியில் இருக்கும் அத்தனை டிஜிட்டல் மற்றும் ஆவணப் பூர்வமான ஆதாரங்களையும் தவெக அரசு கச்சிதமாகத் திரட்டித் தன் கையில் வைத்துள்ளதாம்!
3. தனி வெள்ளை அறிக்கை ஏன்?
பொதுமக்களின் வரிப்பணம் எங்கே போனது என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்பதே இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் என்கிறார் அமைச்சர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத் துறையில் எப்படியெல்லாம் நிர்வாகச் சீர்கேடுகள் அரங்கேறின?
தேவையின்றியும், கூடுதல் விலைக்கும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் வாங்கப்பட்டது எப்படி?
மின்சார வாரியம் தற்போது எத்தனையாயிரம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது?
போன்ற அத்தனை கசப்பான உண்மைகளும், இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் மக்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவுள்ளன. இதுதவிர, மின்சார வாரியம் தொடர்பான இதர புகார்களை மாநிலக் குற்றப்பிரிவு (Crime Branch) போலீசார் காரசாரமாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் 'மின்சாரம்' எப்போதுமே ஒரு சென்சிடிவ் ஏரியா. தவெக அரசு, மின்வெட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதே வேளையில், முந்தைய அரசின் மீது 'வெள்ளை அறிக்கை' என்ற அஸ்திரத்தை ஏவி அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் செக் வைத்துள்ளது. எது எப்படியோ, மின்சார வாரியத்தின் கடன் சுமை குறைந்து, தமிழக மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைத்தால் சரிதான்!
தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். அது எப்போது என பலர் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டிருந்தார்.
அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன. அதாவது கடந்த 2021- 2022 ஆம் ஆண்டு தனிநபரின் கடன் சுமை 67,087 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகத்தில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ 1,28,934 கடன் இருக்கிறது.
திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது. 60 ஆண்டில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ 5 லட்சம் கோடி. அதை விட திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் கடன் அளவு 14.3 சதவீதம் ஆகும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டி மட்டுமே 67 ஆயிரம் கோடி செலுத்துகிறது. மகாாஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.
2021- 2022 ஆம் ஆண்டில் 46,528 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2025- 2026-ல் 78,324 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 2.25 சதவீதம் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது. தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ 13.18 லட்சம் கோடியாகும். தனி நபர் கடன் ரூ 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் தமிழகத்தில் மின் துறை மீதுதான் அதிக கடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மின் துறைக்கென தனி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications