ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான்.. கஸ்டடியில் எடுக்க போறோம்.. ஆஸ்ரா கர்க்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 3 பேரை பிடித்துள்ளோம் என்றும் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்றும், 8 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் கூறினார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் புதிதாக வீடு கட்டி வந்தார். இங்கு தான் இவரது பழைய வீடு இருந்தது. இதை இடித்து தற்போது இவர் புது வீடு கட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

மேலும் அருகில் நின்றவர்களில் 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். சென்னையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் ஒரு கட்சியின் மாநில தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் 8 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலை நடந்த 4 மணி நேரத்திற்குள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று மேலும் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன் என்றும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்றும், 8 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 3 பேரை பிடித்துள்ளோம். உணவு டெலிவரி ஊழியர் உடை, ரத்தம் படிந்த அரிவாள்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துதான் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கைது செய்யப்பட்ட 8 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை பிடித்துள்ளோம். உடனடியாக கைது செய்யவில்லை. அனைத்து சூழல்களையும் ஆய்வு செய்த பிறகுதான் கைது செய்து இருக்கிறோம். கவுன்டர் எவிடன்ஸ் இருந்தால் அதிகாரிகளிடம் தாராளமாக வந்து கொடுக்கலாம்.. ஏதாவது ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. தற்போது பிடிபட்ட 3 பேரை கூட கைது செய்யவில்லை. விசாரணை செய்த பிறகு முகாந்திரம் இருந்தால்தான் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications