மே 26- விவசாயிகளின் கறுப்பு தினம்- சென்னை சிபிஎம் அலுவலகத்தில் நாளை கறுப்பு கொடி ஏற்றம்!
சென்னை: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 6 மாதங்களாக போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதை ஏற்று நாளை மே 26-ந் தேதி கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு சென்னை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்படுகிறது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக 6 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனாலும் விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.

6 மாத கால போராட்டம்
கொட்டும் பணி, கொடிய வெயில், கோரத்தாண்டவமாடும் கொரோனா இவற்றுக்கு மத்தியில் டெல்லி எல்லைகளை மறித்து 6 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தை தொடருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று நாளை 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நாளை கறுப்பு தினம்
இதனால் நாளைய தினத்தை (மே 26) கறுப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கறுப்பு தின போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ,ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிஎபிம் ஆதரவு
சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை கறுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநில கிளை தமது ட்விட்டர் பக்கத்தில், இந்திய மக்களுக்கு உணவு அளித்து வரும் விவசாயிகள் 6 மாதம் போராடியும் அவர்களது பிரச்சனைகளை தீர்க்க தவறிய மோடி அரசை கண்டித்தும், மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் தினமான மே 26 அன்று நாடு முழுவதும் "கருப்பு தினம்" - கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது.

சிபிஎம் அலுவலகத்தில் கறுப்பு கொடி
இப்போராட்டத்தையொட்டி நாளை (26.5.2021) காலை 10.00 மணிக்கு சென்னையில் CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கருப்புக் கொடி ஏற்றுகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications