மீண்டும் மீண்டும் முயன்ற டெல்லி.. அமித் ஷாவிடம் பேச மறுத்த விஜய்.. என்ன சொன்னார்? பின்னணி!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்கான பல வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தனது தனிப்பட்ட அரசியல் பாதையை வகுக்க அவர் உறுதியாக இருக்கிறார்.. இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அரசியல் வியூக வகுப்பாளர்களும் சில "நலம் விரும்பிகளும்" அமித் ஷாவுடன் விஜய்யை சந்திக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் தவெக வளரும், பாஜக வளரும், அதேபோல் விஜயும் ஆட்சி அதிகாரத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் அமித் ஷாவை விஜய் சந்திக்க வேண்டும் என்று அவரிடம் சிலர் பேசி உள்ளனர்.

விஜய் ஆர்வம் காட்டவில்லை
இருப்பினும், இத்தகைய மறைமுக பேச்சுவார்த்தைகள் அல்லது அரசியல் கூட்டணிகளில் தனக்கு தற்போது ஆர்வம் இல்லை என்று விஜய் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த யோசனை மீண்டும் எழுந்தபோது, நடிகர் விஜய் ஒரு உறுதியான கருத்தை தெரிவித்ததாக உள்வட்டாரங்கள் கூறுகின்றன. அமித் ஷாவுடன் சந்திப்பு தேவையில்லை.. இப்போதைக்கு அவரை சந்திக்க விரும்பவில்லை என்று அவர் சுருக்கமாக பதிலளித்ததாகவும், இந்த விஷயத்தை இதற்கு மேல் எடுக்க வேண்டாம் என்று அவர் தனது குழுவிடமும் சில லாபியிஸ்ட்டுகளிடமும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விஜய்க்கு போடப்படும் பிரஷர்
ஏற்கனவே விஜய்க்கு எதிராக கரூர் வழக்கு சிபிஐ கட்டுப்பாட்டில் உள்ளது. சிபிஐக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கே உள்ளது. அதேபோல் விஜய்க்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு உள்ளது.
விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி கட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
கதவை சாற்றிய விஜய்
இதை அடிப்படையாக வைத்து விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா முயன்று வருகிறாராம். விஜயுடன் டெல்லியை சேர்ந்த பிரபல தமிழ்நாட்டு வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனைகளை செய்து வருகிறாராம். விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிரமான பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, டெல்லி தலைவர்கள் தமிழக வெற்றி கழக (TVK) நிறுவனர் விஜய்யுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் வழக்கறிஞர் ஒருவர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. விஜய்யை துணை முதல்வர் வேட்பாளராக நிலைநிறுத்தும் வகையில் ஏற்பாடுகளை பாஜக டெல்லி தரப்பு செய்யத் தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது.
ஆனால் விஜய் இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகள் வேண்டாம்.. டெல்லியுடன் நாம் நெருக்கமாக இருக்க கூடாது என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications