“ரத்தம் தெறித்த” குஜராத் கலவரம்.. பிபிசி ஆவணப்படம் திரையிட்ட டெல்லி பல்கலை மாணவர்கள் தேர்வெழுத தடை
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் பார்த்த மேலும் 6 மாணவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தின் பின்னணியில் அவரது தலையீடு இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை திரையிட்ட மாணவர் தேர்வு எழுதுவதற்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது மிகக்கொடூரமான மதக் கலவரம் வெடித்தது. அதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த கலவரத்தில் பலர் மாயமானதுடன், பெண்கள், சிறுமி, மூதாட்டிகள் பலர் வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். உலகளவில் இந்த மத வன்முறை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிபிசி ஆவணப்படம்
இது தொடர்பாக பிரிட்டன் அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து
குஜராத்துக்கு நேரில் அந்த குழுவை விசாரணை மேற்கொண்டது. அந்த ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு உலகின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

இந்தியாவில் தடை
இந்த ஆவணப்படத்தில், குஜராத் கலவரத்தின் பின்னணியில் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக கூறப்பட்டது அதிர்ச்சியடைய செய்தது. இதனால் 2 பாகமாக வெளியான இந்த ஆவணப் படத்திற்கு தடை விதித்தது மத்திய அரசு. இதனால் இந்தியாவில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்படவில்லை.

வாட்ஸ் அப்பில் பரவல்
ஆனால், வெளிநாடுகளில் ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்படாத காரணத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டினர் அதை பார்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் பிபிசியின் இந்த ஆவணப்படம் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜ் செய்யும் செயலிகளின் மூலமாக அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

மாணவர்கள் போராட்டம்
அதேபோல் நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படம் பார்க்கும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டங்கள் நடந்தன.

டெல்லி பல்கலைக்கழகம்
அதேபோல் டெல்லி பல்கலைக்கழகத்திலும் ஆவணப்படம் பல்வேறு எதிர்ப்புகளை மீறி திரையிடப்பட்டது. காங்கிரஸ் மாணவர் அமைப்பான NSUI தலைமையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அந்த ஆவணப்படத்தை திரையிடப்பட்டபோது அங்கு மோதல் வெடித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்தது.

தேர்வு எழுத தடை
அந்த குழுவின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டதற்காக 2 மாணவர்கள் தேர்வெழுத டெல்லி பல்கலைக்கழகம் தடை விதித்து உள்ளது. ஆவணப்படத்தை முன் நின்று திரையிட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தலைவரும் பி.எச்டி மாணவருமான லோகேஷ் சுக் மற்றும் சட்டத்துறை மாணவர் ரவீந்தர் ஆகியோர் தேர்வெழுத பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்து இருக்கிறது. ஆவணப்படம் பார்த்த மேலும் 6 மாணவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications