இஎம்ஐ 3 மாதம் கட்டியும் இ-ஸ்கூட்டர் வரவில்லையா? டெலிவரி ஊழியர்களுக்கு தமிழக அரசு தந்த மானியம் யோகம்
சென்னை: கிக் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், ஸ்விகி, ஊபர், ஓலா போன்ற, ஆன்லைன் தளங்கள் வழியே, உணவு வினியோகம் உள்ளிட்ட இதர சேவையை செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் சமீபத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதுகுறித்துதான் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கிக் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது, நிரந்தர வேலை இல்லாமல் தினசரி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்புக்காக அரசு அமைத்துள்ள ஒரு நல அமைப்பு. டெலிவரி பாய், ஆட்டோ/கேப் டிரைவர், ஆன்லைன் சேவை பணியாளர்கள், ஃப்ரீலான்சர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

இ ஸ்கூட்டர் மானியம்
இவர்களுக்கு வேலை நிலைத்தன்மை, சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி, விபத்து இழப்பீடு, ஓய்வூதியம், குடும்ப நல உதவிகள் போன்ற ஆதரவுகள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த வாரியத்தின் நோக்கம். தனியார் நிறுவனங்களுக்காக வேலை செய்தாலும், தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு கண்காணிப்புடன் இந்த வாரியம் செயல்படுகிறது.
இதில் Swiggy, Zomato, Dunzo, Blinkit, Amazon, Flipkart போன்ற ஆன்லைன் தளங்களில் டெலிவரி செய்யும் பணியாளர்கள் நிரந்தர ஊழியர்கள் அல்ல; அவர்கள் கிக் தொழிலாளர்கள் என்பதால் கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ் வருவார்கள்.
டெலிவரி பாய் - மின்சார ஸ்கூட்டர்கள்
அதனால் அவர்களுக்கு விபத்து பாதுகாப்பு, மருத்துவ உதவி, நலத்திட்ட உதவிகள் போன்ற அரசு ஆதரவுகள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த வாரியத்தின் நோக்கம்.
டெலிவரி பாய் என அழைக்கப்படும் இவர்களுக்கு மூலதனமே பைக்குகள்தான்.. ஆனால் பெட்ரோல் விலை காரணமாக அவர்களது சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு அற்புதமான திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.. அதன்படி, டெலிவரி பணிகளில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க 20000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக தனியாக தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் பெறுவதற்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். |
ஆனால் இவர்கள், சொமாட்டோ, ஸ்விக்கி, அமேசான் போன்ற ஆன்லைன் சார்ந்த அல்லது டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்களாக இருப்பின் www.tnuwwb.tn.gov.in இணையதளத்தில் இ-ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது,.
மானிய விலையில் ஸ்கூட்டர்
இதையடுத்து, 'கிக்' தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற, கடந்த ஜூலையில் விண்ணப்பம் பெறப்பட்டு, அக்டோபரில் பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வானவர்களுக்கு, நவம்பரில் முதல்வர் ஸ்கூட்டர்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டும், விழா நடத்தப்படவில்லையாம்.. 40 சதவீதம் நபர்களுக்கு மட்டும், நவம்பரில் அதிகாரிகள் ஸ்கூட்டர் வழங்கியதாக தெரிகிறது..
மீதமுள்ளவர்களுக்கு, முதல்வர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
இ-ஸ்கூட்டர்கள்
இந்நிலையில், 100 பயனாளர்களுக்கு, தலா 20,000 ரூபாய் மானியத்தில், 'இ - ஸ்கூட்டர்' வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. தீவுத் திடலில் நடந்த நிகழ்ச்சியில், வருவாய் துறை சார்பில், 13.17 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 155 புதிய வாகனங்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் 'கிக்' தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு, இ - ஸ்கூட்டர்களை முதல்வர் வழங்கினார்.
3 மாதங்களாக இஎம்ஐ
அப்போது முதல்வரிடம் சாவி பெற்ற பயனாளர்கள் சிலர், கடந்த 3 மாதங்களாக இ.எம்.ஐ செலுத்திவிட்டோம்.. ஆனால் இப்போதுதான் அரசு தரப்பில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது, வாகனத்தை தராமலேயே இஎம்ஐ செலுத்த வைத்தது வேதனை அளிக்கிறது என்றார்களாம்..
கிக்' தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, மானிய விலையில் ஸ்கூட்டர் பெற தேர்வான பயனாளர்கள், 'ஸ்கூட்டர்' வராமலே, கடந்த 3 மாதங்களாக இஎம்ஐ கட்டி வந்ததும், இது குறித்து, பயனாளர்கள் நேரடியாக முதல்வரிடமே புகார்களை தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications