2015-ஐ விட அதிக மழை.. அத்தனை பேரும் களத்தில் இறங்கியதால் பெரும் சேதம் தவிர்ப்பு.. முதல்வர் பேச்சு
சென்னை: 2015ம் ஆண்டை விட மோசமான நிலையிலே, வரலாறு பார்க்காத மழை பெய்தது என்றும் எல்லா அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று களத்தில் இறங்கி பணியாற்றியதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த காலத்தில் கொரோனா என்ற ஒரு கொடிய நோய் வந்தது. அந்த நேரத்தில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. கடைக்கு போய் உணவு கூட வாங்க முடியாது ஒரு கொடுமையான சூழ்நிலை. அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்.

என்ன செய்யவில்லை என்பதை நான் பேச விரும்பவில்லை. அது தேவையில்லை இப்போது. திமுக எதிக்கட்சியாக இருந்த போது 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உண்ண உணவு, இருக்க இருப்பிடம் என அனைத்து உதவிகளையும் அவர்களை தேடி தேடி சென்று வழங்கினோம். இதேபோல் 2015-ம் ஆண்டில் ஒரு வெள்ளம் வந்துச்சு. அப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். அப்போது மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்பவிடக்கூடாது.. கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்துவிட வேண்டும். அப்படி திறந்து விட்டால்தான் வெள்ளத்தை தடுக்க முடியும்.. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அவரிடம் போய் தண்ணீரை திறந்துவிட அனுமதி கேட்பதற்கே அதிகாரிகள் தயங்கினார்கள். அப்படி தயங்காமால் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக திறந்திருந்தால் அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
நூற்றுக்கணக்கானோரை நாம் அன்று இழந்தோம். இன்னும் சில கணக்கே இல்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது. ஆனால் அதைவிட மோசமான நிலையிலே.. வரலாறு பார்க்காத மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்பவிடாமல் கொஞ்சம், கொஞ்சமாக திறந்துவிட்டு சென்னையை பாதிப்பின்றி மீட்ட அரசுதான் திமுக. இப்போது பெய்த மழையில் எல்லா அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று விட்டார்கள். எல்லாரும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நின்றார்கள்.. கை கொடுத்தார்கள். இதனால் தான் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி.. ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி எப்போதும் களப்பணியில் ஈடுபடும். ஆனால் அன்று உதவி பொருட்கள் நிவாரண பொருட்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிவாரண பொருட்களில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சி பாகுபாடு இன்றி திமுக மக்கள் பணி செய்து வருகின்றது.
6 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கண்டிப்பாக உறுதியாக வழங்கப்படும். குறிப்பாக மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும். எப்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு வருகிறதோ..
அதேபோல இந்த 6 ஆயிரம் நிவாரண தொகையும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உறுதியாக.. நிச்சயமாக வழங்கப்படும். இப்போது கூட நான் விரைவாக செல்ல வேண்டும். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வந்திருக்கிறது. இப்படி ஆய்வு செய்யும் அதிகாரிகள் கூட தமிழக அரசை பாராட்டியுள்ளது. எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பினை சிறப்பாக கையாண்டீர்கள் என்று பாராட்டியுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications