பசும்பொன் தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்.. என்ன நடந்தது?
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை பூசாரிகள் தடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் பூசாரியின் கன்னத்தில் அறைந்ததால் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேவர் நினைவிடத்திலேயே ஸ்ரீதர் வாண்டையார் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி பல்வேறு தரப்பினரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தனர். அப்போது அங்கிருந்த பூசாரி ஒருவர் ஸ்ரீதர் வாண்டையாரை தடுத்து நிறுத்தினர். இதனால் மூமுக நிர்வாகிகளும், ஸ்ரீதர் வாண்டையாரும் கோபம் அடைந்தனர்.
உடனடியாக பூசாரியின் கன்னத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அறைந்ததால், அந்த இடத்தில் கைகலப்பு ஏற்பட்டது. ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் மூமுகவினர் உடன் பூசாரிகள் மோதலில் ஈடுபட்டனர். இதன்பின் மோதலை சமாதானம் செய்ய சில முயற்சித்த போது, பூசாரி வெளியேற்றப்பட வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் தீவிரமாக இருந்தார்.
ஒரு கட்டத்தில் பூசாரியை வெளியேற்ற வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் தேவர் நினைவிடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தனர்.
அப்போது ஸ்ரீதர் வாண்டையார் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்து உடனே டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அவரை தூக்கினர். அதன்பின் அங்கு சூழல் இயல்புக்கு வந்தது. வழக்கமாக தேவர் நினைவிடத்திற்கு வெளியில் தான் இப்படியான மோதல்கள் அரங்கேறும். ஆனால் இம்முறை தேவர் நினைவிடத்திலேயே கைகலப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications