"ஆட்சி மாற்றத்தால்.. 10 ஆண்டுகள் சங்கர் ஜிவால் ஓரம்கட்டப்பட்டார்.." சென்னை காவல் ஆணையர் அருண் பேச்சு
சென்னை: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.. அதற்காக நேற்று சங்கர் ஜிவாலுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், ஆட்சி மாற்றத்தால் 2011 தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் சங்கர் ஜிவால் ஓரங்கட்டப்பட்டதாகவும் முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக டிஜிபியாக பொறுப்பு வந்தவர் சங்கர் ஜிவால். கடந்த 2023ம் ஆண்டு சைலேந்திர பாபு டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அப்போது சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவியேற்றார். சுமார் 2 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31 வரை இருந்தாலும் இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்றார்.

சங்கர் ஜிவால்
அதேநேரம் சங்கர் ஜிவால் ஓய்வுக்கு பிறகு தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.. அதன்படி அவர் ஓய்வு பெற்றவுடன் தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நேற்று ஓய்வு பெற்ற சங்கர் ஜிவால் தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவைத் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீராஜ் குமார் பிறப்பித்தார்.
அருண் பேச்சு
இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய தினம் சங்கர் ஜிவாலின் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சி மாற்றத்தால், 2011ல் தொடங்கி 10 ஆண்டுகள் சங்கர் ஜிவால் ஓரம் கட்டப்பட்டு, உரிய அங்கீகாரம் இல்லாத பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றம்
அவர் மேலும் கூறுகையில், "ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, (2011ல்) சங்கர் ஜிவால் தூக்கி அடிக்கப்பட்டார். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தொலைதூரத்தில் முக்கியத்துவம் இல்லாத பதவிகள் கொடுக்கப்பட்டன. அந்த 10 ஆண்டுகள் முழுமையாக அவர் ஓரம்கட்டப்பட்டார்.
எனக்கு தெரிந்து அந்த 10 ஆண்டுகள் முழுக்க ஓரம்கட்டப்பட்ட ஒரே அதிகாரி சங்கர் ஜிவால் மட்டுமே. ஆனால், அதற்கெல்லாம் சங்கர் ஜிவால் கவலைப்படவில்லை. ஒருநாள் கூட தன்னை ஓரங்கட்டுவதாக அவர் கவலைப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ஆனால், எந்தப் பதவி கொடுத்தாலும் மனச்சோர்வு இல்லாமல் சங்கர் ஜிவால் பணியாற்றினார்" என்று அவர் தெரிவித்தார்.
யார் இந்த சங்கர் ஜிவால்
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். அதன் பிறகு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், 1990ம் ஆண்டில் ஐபிஎஸ் ஆனார். தமிழ்நாட்டில் தனது பணியைத் தொடங்கிய அவர், முதலில் 1993ல் மன்னார்குடி உதவி எஸ்பியாக நியமிக்கப்பட்டார். 1995ல் சேலம் எஸ்பி ஆக நியமிக்கப்பட்ட அவர், பிறகு ஆளுநரின் உதவியாளராகவும் இருந்தார்.
தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற அவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். குறிப்பாக சென்னை காவல் ஆணையராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். மேலும், இதுவரை சங்கர் ஜிவால் இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications