சின்ன பிசிறு கூட இல்லாம சிறப்பா முடிச்சிட்டீங்க.. தமிழக போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு!
சென்னை : தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணியை சிறப்பாக முடித்த காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் என காவல்துறை அதிகாரிகள், போலீசாரை பாராட்டியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
தேவர் குருபூஜை நிகழ்வையொட்டி சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், சிறு மோதல் கூட ஏற்படாமல் அமைதியான முறையில் 3 நாள் குருபூஜை நிகழ்வு முடிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

தேவர் குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ஆம் ஆண்டு குருபூஜை விழா கடந்த அக்டோபர் 28ஆம் தேதி 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. 30ஆம் தேதி அரசு விழாவாக தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

பாதுகாப்பு பணி
தேவர் ஜெயந்தியையொட்டி, தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பசும்பொன் கிராமத்தில் நேரில் ஆய்வுசெய்து, கண்ட்ரோல் ரூம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார். மேலும், 14 இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டு நேரடியாக சென்னையிலிருந்தும் இதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டிருந்தது.

ரகளைகள் தவிர்ப்பு
தேவர் ஜெயந்திக்கு முன்னதாகவே, கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வாகனங்களில் ஏறி சாகசம் செய்வோர், ரகளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், முந்தைய ஆண்டுகளை விட ரகளை போன்ற சம்பவங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. இந்நிலையில், தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணியை சிறப்பாக முடித்த காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சிறு மோதல் கூட நிகழாமல்
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த 30.10.2022 அன்று நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் இராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் மயில்வாகனன், 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10.000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.

பாராட்டும் நன்றியும்
உங்களது இந்தச் சாதனையின் மூலம் நமது தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள். பாதுகாப்புப் பணியில் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கடமையாற்ற வாழ்த்துகிறேன்." என்று பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications