தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றம்.. அன்புமணி மனைவி சவுமியா களமிறங்குகிறார்!
சென்னை: தர்மபுரியில் தொகுதியில் பாமக வேட்பாளராக அரசாங்கம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முதல்கட்டத்திலேயே அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாமக கூட்டணி எனப் பல முனை போட்டி நிலவி வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பாமக: இதில் பாமகவை பொறுத்தவரை அவர்கள் அதிமுக கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு இந்த முறை 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்கும் என்பது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
அதில் பாமக மிகவும் வலிமையாக உள்ள தர்மபுரியில் முதலில் அரசாங்கம் என்பவர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளது. தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
சவுமியா அன்புமணி: பாமக வலிமையாக உள்ள தொகுதிகளில் ஒன்றாகத் தர்மபுரி இருக்கும் நிலையில், அங்கே வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சூழலில் தான் தர்மபுரியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதில் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக முனைவர் சவுமியா அன்புமணி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாகப் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர்கள் யார்: பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்குக் காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக இன்று வெளியிட்டது. அதில் தர்மபுரியில் அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் தான் இப்போது மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாமகவை பொறுத்தவரைத் திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் மயிலாடுதுறை - ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். காஞ்சிபுரம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications