சல்லி காசு தர மாட்டேன்னு அண்ணாமலை சொன்னாரே.. விருதுநகரில் பாருங்க.. பாஜகவுக்கு தில்லுதான்.. போச்சா
சென்னை: மக்களவை தேர்தல் முடிந்த பரபரப்பு இன்னும் தமிழகத்தைவிட்டு அகலவில்லை.. இதோ விருதுநகரில் ஒரு பஞ்சாயத்து முளைத்திருக்கிறது.
கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த கோவை தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டது.

பேட்டி: அதனால்தான் வேட்புமனு தாக்கல் செய்த தினத்தன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
"கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும். ஆனால், தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது" என்று திமுகவை டேமேஜ் செய்திருந்தார்.
கிண்டல்: அண்ணாமலை இப்படி உறுதி தந்திருந்தாலும், இந்த கருத்தை திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்போதே கிண்டல் செய்து விமர்சித்திருந்தார்கள்.
அதுமட்டுமல்ல, அடுத்த ஓரிரு நாட்களிலேயே, ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோவை எடுத்துக் கொண்டு, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஓடியது திமுக.. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்கள்.. ஆனால் அது என்ன ஆனது என்று தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு பூகம்பம் விருதுநகரில் வெடித்திருக்கிறது.
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா, அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் விஜய பிரபாகரன், காங்கிரஸில் மாணிக்கம் தாகூர் களமிறங்கினார்கள்..
இதில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, பாஜகவினர் யாருமே தொகுதிக்கு வரவில்லை என்றும், இதனால் கடுப்பான ராதிகா, புரோகிராமை கேன்சல் செய்துவிட்டு கிளம்பி போய்விட்டதாகவும் ஆரம்பத்தில் தகவல்கள் மீடியாக்களில் பரபரத்தன.
பாஜக பிரச்சாரம்: இதற்குபிறகு, வாக்கு சேகரிப்பதற்காக, மாவட்ட பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. தேர்தல் வேலைகளிலும் ஈடுபட்டனர்.. இதில், பாஜக பூத் ஏஜென்ட்களுக்காக, தலைமையிலிருந்து ஒரு கணிசமான நிதி வழங்கப்பட்டதாகவும், இந்த நிதியில் 40 லட்சம் ரூபாயை, பாஜக நிர்வாகிகள் கை வைத்துவிட்டதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.
இப்படியொரு புகாரை கிளப்பியது, சாட்சாத் பாஜகவினரேதான்.. சொந்த கட்சிக்குள்ளேயே பிரச்சனை வெடித்து, ஊரெல்லாம் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியிலுள்ள பாஜக நிர்வாகிகளான மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக விருதுநகர் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் ஆகிய இந்த 4 பேரும், விருதுநகர் தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர்களாக அக்கட்சி தலைமை சார்பில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இப்போது, இவர்கள் மீதுதான் புகார் கிளம்பியிருக்கிறது.. திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிக்குட்பட்ட முக்கிய இடங்களில் பாஜக நிர்வாகிகளே இதுகுறித்து போஸ்டர்களை ஒட்டி, இவர்களின் போட்டோக்களையும் அதில் பெரிதாக அச்சிட்டுள்ளார்கள்..
40 லட்சம் ரூபாய்: "பாஜக விருதுநகர் பாராளுமன்றம் தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி.. பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 40 லட்சம் வரை சுருட்டிய இந்த 4 மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்..
ஆனால், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே கிழிக்கப்பட்டுவிட்டதாம்.. இப்படி சொந்த கட்சிக்குள்ளேயே புகார் சொல்லியதும், பிறகு கிழிக்கப்பட்டதும் என பாஜகவுக்குள் அனல் அடித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications