ஹலோ மிஸ்டர் அமீர்.. கொஞ்சம் சும்மாயிருங்க, அப்பறம் ஜால்ரா போடலாம்.. வாழவே பயமா இருக்கு: யார் பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளது என்று மக்கள் பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை திமுக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.. அத்துடன், திமுக அரசின் சட்டம் - ஒழுங்கு குறித்தும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
திமுக அரசின் சட்டம் ஒழுங்கினை, தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன.. சமீபத்தில், அதாவது கடந்த மே மாதம் திமுகவின் 3 ஆண்டு கால சாதனைகளை, திமுகவினர் இணையத்தில் பட்டியலிட்டு பாராட்டி வந்தனர்.

ராஜேஸ்வரி பிரியா: அப்போதுகூட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , நாம் தமிழர் கட்சி சீமான் என பலரும் வரிசைக்கட்டி வந்து திமுகவை விமர்சித்திருந்தனர். அப்போது பிரதானமாக திமுக அரசு மீது இவர்கள் அனைவரும் வைத்திருந்த குற்றச்சாட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுதான்.
இந்த வரிசையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும், திமுகவை அப்போது விமர்சித்திருந்தார்.. "திமுக ஆட்சியில் சாதிய பிரச்சினைகள், லாக்கப் மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீரழிவு, தமிழகம் முழுவதும் விதவிதமான போதைப் பொருள் விற்பனை, டாஸ்மாக் அவலங்கள், கனிம வளங்கள் கொள்ளை, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு, மின்கட்டண உயர்வு காரணமாக அல்லல் மிக்க வாழ்வை நடத்தி வருகிறார்கள். 3 வருட கால ஆட்சி கொலைகள் அதிகமானதே சாட்சி!" என்று பதிவிட்டிருந்தார்.
அன்புமணி ராமதாஸ்: இன்றைய தினமும், திமுக அரசு மீது இதே குற்றச்சாட்டை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.. அதிலும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று காலையிலேயே காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன.. இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியாவிட்டால், தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும்" என்று ஆவேசத்துடன் கூறியிருக்கிறார்.
திமுக அரசு: இந்த வரிசையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி மறுபடியும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
"சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவது தமிழ்நாட்டின் பாதுகாப்பினை கேள்வி குறியாக்கியுள்ளது. கட்சி நிர்வாகிகள், மூதாட்டி, பத்து வயது சிறுமி என இரண்டு நாட்களுக்குள் எத்தனை கொலைச் சம்பவங்கள். தமிழ்நாட்டில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளது என்று பொது மக்கள் பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை திமுக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அவர்களால் இந்த சூழ்நிலையை தடுக்க இயலவில்லை என்றால் தகுதியற்ற முதல்வராகவே கருதப்படுவார்.
இயக்குனர் அமீர்: இதற்கிடையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று பேசும் அமீ்ர்(இயக்குனர்) போன்றவர்கள் சற்று அமைதியாக இருக்கவும். வெட்டி கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரின் மனநிலையை நினைத்து பாருங்கள்.. பிறகு உதயநிதி அவர்களுக்கும் திமுகவிற்கும் ஜால்ரா போடலாம்" என்று அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
நேற்றைய தினம் இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும்" என்று அமீர் தெரிவித்திருந்தார்.
பதிலடிகள்: விஜய், சீமானுடன் அரசியல் பயணத்திற்கு தயார் என்றும் அமீர் தன்னுடைய பேச்சின்போது அதிரடியாக அறிவித்திருந்தார்.. அமீரின் இந்த பேச்சுதான், நேற்று முதல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும்நிலையில், ராஜேஸ்வரிபிரியா கொந்தளித்து இதை கேள்வியெழுப்பியிருக்கிறார்.. இதையடுத்து, திமுக தரப்பினர் திரண்டு வந்து, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கு பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications