டெல்லி பார்த்துக்கும்.. கவனமா இருங்க! தமிழ்நாடு பாஜகவிற்கு மோடி தந்த "அசைன்மென்ட்".. ஆபரேஷன் 20!
சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை இரவு பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்தார். பிஸியான நாளில் கூட 40 நிமிடம் வரை பாஜக நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனையில் பல விஷயங்கள் பேசப்பட்டதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. முக்கியமாக அதிமுக கூட்டணி குறித்தும் பேசப்பட்டதாக சில செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி சந்திப்பில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா கலந்து கொள்வதற்காகவே சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தார். செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் 30 நிமிடம் அவர் ஓய்வு எடுத்தார்.
இதற்கு பின்புதான் கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை செய்தார். சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. பாஜக மூத்த தலைகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

ஆலோசனை
வானதி சீனிவாசன், அண்ணாமலை, எச். ராஜா, எல் முருகன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் முதலில் ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன் குறித்து விசாரித்து உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சிலரின் அறிமுக கூட்டமும் அங்கு நடைபெற்றது. அவர்களை நன்றாக வேலை செய்யும்படி மோடி வாழ்த்தினார். அதோடு புதிதாக திருமணம் ஆன நிர்வாகிகளை வாழ்த்தினார்.

2 விஷயங்கள்
இந்த ஆலோசனை கூட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பற்றி பேசப்பட்டு உள்ளது. முதல் விஷயம்.. அதிமுக கூட்டணி. அதிமுக கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். கட்சியில் பிரச்சனை என்ன.. இது அடுத்து என்ன நிலைக்கு செல்லும். எடப்பாடி - ஓபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு தருவது நல்லது. அதிமுக மோதலால் பாஜகவிற்கு சாதகமா, பாதகமா என்று பல விஷயங்களை பேசி உள்ளனர். ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இடங்கள்
இரண்டாவது விஷயம் லோக்சபா தேர்தல் பற்றியது. 2024 மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. சில மாநில தேர்தல்களை சேர்த்து முன்கூட்டியே லோக்சபா தேர்தல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தலுக்கு தயாராக இருங்கள். வார்டு வாரியாக பணிகளை தொடங்குங்கள். அப்போதுதான் நாம வெற்றிபெற முடியும். 20 எம்பிகளை கண்டிப்பாக வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 5 அமைச்சர்களாவது இருக்க வேண்டும்.

சட்டசபை தேர்தல்
5 மத்திய அமைச்சர்கள் இருந்தால்தான் அடுத்த சட்டசபை தேர்தலில், அவர்களின் தொகுதிகளில் எம்எல்ஏக்கள் அதிகம் வெற்றிபெற முடியும், என்று பிரதமர் மோடி இந்த சந்திப்பில் நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார் என்கிறார்கள் கமலாலயம் வட்டாரத்தினர். அதோடு கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். அதை டெல்லி பாஜக பார்த்துக்கொள்ளும். நீங்கள் கட்சியை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

கூட்டணி
கூட்டணி பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். அதில் நாங்கள் முடிவு எடுப்போம் என்று பிரதமர் மோடி இந்த சந்திப்பில் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மீட்டிங் முடிந்து வெளியே வந்த அண்ணாமலையோ, பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. ஆசி வாங்க வந்தோம். பிரதமருக்கு தெரியாத அரசியல் இல்லை. அவர் இன்று உற்சாகமாக இருந்தார். இதனால் அரசியல் பேச எதுவும் இல்லை. அவர் இன்று நடந்த நிகழ்வு பற்றி பேசினார். தேர்தல் நேரம் இல்லை இது. அதனால் அவர் அரசியல் பேசவில்லை, என்று கூறினார்.












Click it and Unblock the Notifications