பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா.. டெல்லி "ரோட்டில்" நின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ஏன்
சென்னை: பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றிருந்தார். இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
கடந்த 2017ல் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய பிறந்தநாளான டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்... இதனால், ரஜினிகாந்தின் அரசியல் வருகை தேசிய அளவில் கவனம் பெற்றது.

பிரச்சாரம்: எனவே, ரஜினியை வைத்து, தமிழகத்தில் காலூன்ற பாஜக பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்தது.. ரஜினிகாந்த் ஆன்மீகவாதி என்பதாலும், ஆன்மீக அரசியல் குறித்து அவர் வெளிப்படையாகவே பேசியிருந்தாலும் எப்படியும் பாஜகவிற்கு ஆதரவு தெரிப்பார், பாஜகவுக்காக பிரச்சாரம் மேற்கொள்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உடல்நிலையை காரணம் சொல்லி அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டார். எனினும், ரஜினியின் ரசிகர்களை பாஜக பக்கம் கொண்டுவரும் முயற்சியும் கையில் எடுக்கப்பட்டது. அதேபோல, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போதும் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இறுதியில் ரஜினி யாருக்குமே தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தவில்லை.
உ.பி.யோகி: ஆனால் அதேசமயம், பாஜக மேலிட தலைவர்களுடன் நல்ல இணக்கத்துடனேயே பயணித்து வருகிறார்.. பிரதமர்மோடி, அமித்ஷா முதல் உபி முதல்வர் யோகி வரை ரஜினிகாந்த்துடனான நட்பு இறுக்கமாகவே திகழ்ந்து வருகிறது. டெல்லி செல்லும்போதெல்லாம் பாஜக தலைவர்களை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார் ரஜினி.
நேற்றுகூட, சந்திரபாபு நாயுடு 4வது முறையாக ஆந்திரா முதல்வராக பதவியேற்றார்.. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டாவுடன், நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்த்: விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த்தை பிரதமர் தேடியதாக தெரிகிறது.. இதனால் மேடையில் பின்புறம் நின்றுகொண்டிருந்த சந்திரபாபு நாயுடு, ரஜினிகாந்த் நிற்கும் திசையை நோக்கி கைகாட்டி சிக்னல் தரவும், உடனே ரஜினிகாந்தை நோக்கி வேகமாக சென்றார் பிரதமர் மோடி..
ரஜினிகாந்த்தும், மனைவி லதாவும் பிரதமருக்கு வணக்கம் சொல்ல, உடனே மோடி அவர்களின் கைகளை குலுக்கி நலம் விசாரித்தார்.. இந்த வீடியோவை இப்போதுவரை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற விழாவிலும் ரஜினி பங்கேற்றிருந்தார்.. முன்னதாக ஆன்மீக பயணம் முடித்துக்கொண்டு கடந்த வாரம் சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய ரஜினியிடம், "மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்வீர்களா?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரஜினி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.. ஆனால், எதிர்பார்த்தபடியே பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றார் ரஜினிகாந்த்..
சாதனைகள்: அப்போது செய்தியாளர்களிடம் "ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை.. தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி" என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.. அதாவது, இந்த பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
சிபி ராதாகிருஷ்ணன்: விழா முடிந்து சென்னைக்குத் திரும்புவதற்காக ஏர்போர்ட் கிளம்பினார். அவரது கார், விழா நடந்த வளாகத்தை தாண்டியபோதே மக்கர் பண்ணியிருக்கிறது. கார் டிரைவர் வண்டியை பழுதுப்பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒடிசா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனின் கார் வந்தது.
ரஜினியை அழைத்துச் சென்ற கார் ஓரமாக நிற்பதை பார்த்ததுமே, கீழே இறங்கி வந்து ரஜினியிடம் பேசியிருக்கிறார்.. பிறகு விஷயத்தை அறிந்து, உடனடியாக தன்னுடைய காரில் ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்துள்ளார் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இந்த சம்பவம்தான் பாஜக மேல்மட்டங்களில் பரவிக்கிடக்கிறதாம். அதுமட்டுமல்ல, ரஜினி மீது பாஜக தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பும், அன்பும் அவரது ரசிகர்களை பூரிப்படைய செய்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications