மோசம்.. இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது.. அமித் ஷா பேச்சால்.. எடப்பாடியிடம் பாய்ந்த அதிமுக தலைகள்
சென்னை: தமிழ்நாட்டில் 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்று அமித் ஷா போட்ட குண்டு, எடப்பாடி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் தொடங்கி, அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகள் வரை அதிர்ச்சியைத் தந்துள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் நேற்று மாலை நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் சுமார் 45 நிமிடங்கள் பேசினார் அமித் ஷா.
வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், 2026ல் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் என அமித்ஷா மீண்டும் உறுதியாகப் பேசி உள்ளார். ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அதை சிறப்பாக நடத்தி தர வேண்டும். மதுரை மண், பல மாற்றங்களுக்கு வித்திட்ட மண். இந்த கூட்டமும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். திமுக ஆட்சியைக் கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும். 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக அரசு அமையப்போகிறது என்று அமித் ஷா அடித்து கூறி இருக்கிறார்.
அதிமுக சீனியர்கள்
அமித் ஷாவின் பேச்சை முழுமையாக கேட்ட அதிமுக சீனியர்களான கே.பி.முனுசாமி, சண்முகம், தம்பிதுரை ஆகியோர், எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்து தொடர்புகொண்டு, அமித் ஷாவின் பேச்சு குறித்துக் கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக, "எங்களிடம் கலந்தாலோசிக்காமல் அமித் ஷாவிடம் ஏதும் உறுதிக் கொடுத்திருக்கிறீர்களா? கமிட் ஆகியிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். பாஜகவுடனான கூட்டணியைக் கூட தொண்டர்கள் ஒப்புக் கொள்வார்கள் கூட்டணி ஆட்சி என்பதை ஏற்கவே மாட்டார்கள். அதனால், வாக்கு ஏதும் கொடுத்திருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டிருக்கிறார்கள்.

அப்போது, "எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பாஜகவுடன் ஏற்பட்டிருப்பது கூட்டணி மட்டுமே தவிர, கூட்டணி ஆட்சியில்லை என நமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து விட்டோம். அதன் பிறகு எந்த புதிய கமிட்மெண்டிலும் நான் சிக்கவில்லை. இருந்தும் அமித் ஷா ஏன் இப்படி பேசுகிறார்? என எனக்கும் புரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
மேலும், "எப்படிப்பட்ட பின்னணியில் நாம் பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தினோம் என்பது அவருக்குத் தெரியும். அப்படியிருக்கையில், நம்முடன் கூட்டணி ஆட்சி பற்றி பேசப்படாத விசயங்களை ஏன் அவர் பேச வேண்டும்? பாஜக கூட்டணியை மறு பரிசீலனை செய்யுங்கள்" என்று மாவட்ட நிர்வாகிகள் பலர் தங்களிடம் வலியுறுத்துவதையும் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளனர் சீனியர்கள். அதுமட்டுமல்லாமல், "கூட்டணி ஆட்சி தான் என்று அழுத்தம் திருத்தமாக அமித் ஷா பேசுவது கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதுடன் தேர்தல் வரை ஆரோக்கியமாக கூட்டணியை நகர்த்திச் செல்வதில் முரண்பாடுகள் உருவாகும்" என்றும் சீனியர்கள் அதிருப்தியடைந்ததை ஆமோதித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக ர.ர.க்களை ஏற்கனவே எடப்பாடி சமாதானப்படுத்தியிருக்கும் நிலையில், அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி பேச்சால், மீண்டும் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் எடப்பாடி எப்படி சமாளிப்பார் என்பதுதான் அரசியல் பரபரப்பாக அதிமுகவில் எதிரொலித்தபடி இருக்கிறது.












Click it and Unblock the Notifications