“டம்மி”.. ஆளுநரும் இசையமைப்பாளரும் ஒன்னு! சாமானியனின் மைக்கை பறிக்கிறார் - இயக்குநர் அமீரின் லாஜிக்
சென்னை: இசையமைப்பாளரும் ஆளுநரும் ஒன்றுதான் எனவும், அதிகாரம் இல்லாத பதவியாக இருந்தாலும் பரபரப்பாக காட்டிக்கொள்வார் எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், இயக்குநருமான சேரன் கதாநாயகனாக நடித்து இருக்கும் தமிழ்க்குடிமகன் திரைப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கி உள்ளார். இதில் ஸ்ரீபிரியா, லால், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர்கள் அமீர், மாரி செல்வராஜ் உள்ளிட்ட இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த விழாவில் பேசிய இயக்குநர் அமீர், "இன்றைய காலகட்டத்தில் திரைப்பட இசை வெளியீட்டு விழா எதற்கு நடத்தப்படுகிறது என்று இசையமைப்பாளர் சார் சி.எஸிடம் பேசியபோது அவர் ஒன்றை சொன்னார். ஒரு ஆளுநரை போன்று தன்னை அமர வைத்து இருப்பதாகவும், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என அவர் கூறினார். உண்மையான அதுவாகவே இருக்கிறது.
படம் பற்றி வெளியில் பேசப்பட வேண்டும் என்பதே இசை வெளியீட்டு விழாவின் நோக்கம். அப்படி என்றால் இசையமைப்பாளர் பற்றி இசை வெளியீட்டு விழாவில் பேசுவது முக்கியம் அல்ல. படம் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே அது நடத்தப்படுகிறது. இசையமைப்பாளர் சாம் சி.எஸின் இசையைப் பற்றி பேச மக்கள் தயாராக உள்ளார்கள்.
மக்களின் பார்வைக்கு அவரது இசையை வைத்து உள்ளோம். அவர்கள் இனி அதை பார்த்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் இசையமைப்பாளர் கூட ஆளுநரை போன்றவர் தான். அதிகாரமில்லாத ஒரு பதவியாக அது இருந்தாலும் கூட, வெளி உலகில் பரபரப்பாகவே இருக்கிறார்.
ஆளுநர் தன்னுடைய வேலையை செய்துகொன்டே இருக்கிறார். சாமானியன் பேசுவதை கூட அவர் தடுக்கிறார். மைக்கை அணைக்க சொல்கிறார். எனவே சாம் சி.எஸ் சொன்ன கருத்து சரியான ஒன்று தான். அதில் மாற்று கருத்து கிடையாது." என்றார். அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டியே அமீர் இவ்வாறு பேசியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அம்மாசியப்பன் என்ற பெற்றோர் எழுந்து நின்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நோக்கி நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று கேட்டார்.
உடனே ஆளுநர் ரவியோ, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டோம் என்று பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அந்த பெற்றோர் ஏதோ பதிலளிக்க அவர் மிரட்டப்பட்டு மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது மீண்டும் நீட் விவகாரம் விவாதப் பொருளாகி இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
