வாங்கிய பணத்தைக் கூட டைரக்டர் தரவில்லை.. ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதி வேதனை
சென்னை: ஷூட்டிங்கின் போது தங்களிடம் வாங்கிய பணத்தைக் கூட இயக்குனர் திருப்பி தரவில்லை என்று 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது பொம்மன், பெள்ளி தம்பதியர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன்-பெள்ளி தம்பதி வசித்து வருகிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்கள் யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளை இவர்கள் பராமரித்து வந்தனர். அந்த யானைகளுக்கு ரகு, பொம்மி என பெயர் சூட்டி இருவரும் தங்களின் குழந்தைகள் போல் பராமரித்து வந்தனர்.

இந்த யானை குட்டிகளை பொம்மன் - பெள்ளி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாக கொண்டு ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை கார்த்தி கோன்சால்வ்ஸ் என்ற இயக்குனர் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார். இந்த படத்தில் பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும், யானைக்குட்டிகளுக்கும் இடையேயான பிணைப்பை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டப்பட்டு இருக்கும்.
பெற்ற குழந்தைகளை போல் பாவித்து இரு குட்டிகளையும் இந்த தம்பதி வளர்த்தும், பொம்மன்-பெள்ளி தம்பதியோடு யானைக்குட்டிகள் நெருங்கி பழகுவதும் என அனைவரையும் கவரும் வகையில் ஆவணப்படம் அமைந்து இருந்தது. இந்த ஆவணப்படம் இந்த ஆண்டு நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விழாவில் விருது கிடைத்தது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.
பொம்மன்-பெள்ளி தம்பதியை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பாராட்டி ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார். இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டினார். தேவையான உதவிகளை தன்னிடம் கேட்கும்படி அவர் கூறிவிட்டு சென்றார். நேற்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதி திரெளபதி முர்முவும் முதுமலை தெப்பக்காடு சென்று பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டினார்.
இப்படி ஆஸ்கர் விருது கிடைத்ததில் இருந்தே விவிஐபிக்களுடனான சந்திப்பு என எப்போது ஊடக வெளிச்சத்தில் இருந்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதி அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தங்களுக்கு டைரக்டர் பணம் எதுவும் கொடுக்கவில்லை என குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொம்மன் - பெள்ளி தம்பதி கூறியதாவது:-
ஆவணப்படத்தில் இடம் பெற்ற தங்களுக்கு பணம் எதுவும் இயக்குநர் தரவிலை. படம் எடுக்கும் போது கூட திருமணம் காட்சி எடுக்க தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால், எங்களின் பேத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்தோம். அந்த பணத்தைக் கூட தற்போது வரை அந்த பெண் இயக்குனர் திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கார், வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும் இயக்குனர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
படப்படிப்பின் போது இயக்குனர் சொன்ன அனைத்தையும் நாங்கள் செய்து கொடுத்தோம். எங்களுக்கு ஒரு டீ கூட இயக்குனர் வாங்கி கொடுக்கவில்லை. முதல்வர் மு.க ஸ்டாலின் மட்டுமே ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். இந்த ஆவணப்படம் மூலம் எங்களுக்கு கிடைத்தது இது மட்டும் தான்" என்றார். பொம்மன் - பெள்ளி தம்பதியின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துக் கூற இயக்குனர் கார்த்திகி மறுத்துவிட்டார். எனினும் இது தொடர்பாக விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம், ஒப்பந்தப்படி பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு உரிய தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications