1957க்கு முன்பே கார், வீடு வைத்திருந்த தலைவர் கருணாநிதி.. நெகிழ்ச்சியுடன் பேசிய கரு.பழனியப்பன்!
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் பாகுபாடின்றி கொண்டாடும் ஒரே தலைவர் கருணாநிதி என்று இயக்குநர் கரு.பழனியப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் கரு.பழனியப்பன். இதுமட்டுமல்லாமல் தமிழா தமிழா நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பல்வேறு விவாதங்களை கொண்டு செல்கிறார். திராவிட அரசியலில் அதிக ஈடுபாடு இருந்தாலும், இதுவரை திமுக உறுப்பினர் அட்டையை வாங்காமல், அக்கட்சிக்காக பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்காக பரப்புரை மேற்கொண்ட கரு.பழனியப்பன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஏன் கருணாநிதி கொண்டாடப்படுகிறார்?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் கருணாநிதி குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் இருந்தாலும், நாம் கருணாநிதியை அதிகம் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம், அவர் முதலமைச்சர் மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார் என்பதற்காக தான். 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுகவின் தலைவராக இருந்தவர்.

ஒரே ஒருவர்
கருணாநிதியை போல் வேறு தலைவரே இல்லையா என்று கேட்டால், இருக்கிறார்கள். சரி அப்படி இருப்பவர்களில் கவிதையும்,. இலக்கியமும் எழுதுபவர்கள் யாரும் இருப்பார்களா என்று கேட்டால், ஒருவரோ இருவரோ இருப்பார்கள். ஆனால் அதிலும் கருணாநிதி இருப்பார். அவர் அரசியல் மட்டுமல்ல கவிதை, எழுத்து, பத்திரிகை, சினிமா என துறைகளிலும் இருக்கும் ஒருவர். அதனால்தான் தமிழ்நாடு கட்சிகள் பாகுபாடுகளை எல்லாம் கடந்து ஒருவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.

எழுத்தின் தொடக்கம்
கருணாநிதியின் 20வது வயதில், 1944ம் ஆண்டு 'பழனியப்பன்' என்ற ஒரு நாடகத்தை எழுதினார். அதை ஒரு நாடக நடிகர் சங்கம் ரூ.100க்கு வாங்கியது. அந்த 100 ரூபாயை வைத்துக்கொண்டு தான் திருவாரூரில் திராவிடர் கழக கூட்டத்தை நடத்தினார். அந்த வயதிலேயே கொள்கை பிடிப்புடன், நிர்வாகியாகவும் செயல்பட்டவர்.

கதைகள் மூலம் கார்
பின்னர் பல்வேறு கதைகளை எழுதி வந்த அவர், 1951ம் ஆண்டு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 1955-ல் கோபாலபுரத்தில் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். அப்போது அவருக்கு வயது வெறும் 33 தான். இவையெல்லாம் அவர் 1957ம் ஆண்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்பே செய்துமுடித்துவிட்டார்.

எம்எல்ஏ-வுக்கு முன்
இன்னும் சொல்லப்போனால், 1957ல் எம்எல்ஏ ஆவதற்கு முன்னே சொந்தமாக காரும் வீடும் வைத்து இருந்த திமுக நிர்வாகிகளில் கலைஞரும் ஒருவர். இவையெல்லாம் அவர் எழுதியே சம்பாதித்து வாங்கியது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications