லுங்கி, பனியனில் 8 பேர் வந்தாங்க.. கைதான போது என்ன நடந்தது? இயக்குனர் மோகன் ஜி பதில்
சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து முதல்வரே பேசிய தைரியத்தில் நான், பழனி பஞ்சாமிர்தம் குறித்து பேசினேன். ஆனால் அது தவறாக போய் சேர்ந்துள்ளது. நேற்று என்னை கைது செய்த போது எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை.. என் குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டு , இந்த பக்கம் திரும்பிய உடனே , ஒரு 8 பேர் வந்து. என் வீட்டு வாசலிலேயே என்னை அழைத்து சென்றார்கள் என இயக்குனர் மோகன் ஜி கூறினார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறும் போது, துளி கூட மனசாட்சி இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் விளையாடி இருக்காங்க... இதை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பஞ்சாமிர்தத்தில் கூட சில பொருட்களை கலந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதற்கு சாட்சிகள் எதுவும் என்னிடம் இல்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருச்சி உள்ளிட்ட இடங்களில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று வீட்டில் இருந்த திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஆர்.பாலாஜி, போலீசார் சமர்ப்பித்த ஆவணங்களை சரி பார்த்தார். பின்னர் அவர் கூறுகையில், குற்றமும், அதற்கான பதியப்பட்ட வழக்கும் சரியானது ஆனால் அந்த வழக்கில் கைது செய்ததற்கான முகாந்திரம் இருந்தாலும், முறையான கைது நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. கைது நடவடிக்கை சட்ட விரோதமானது. எனவே அவரை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் மோகன் ஜி 2 நாட்களில் இருநபர் ஜாமீன் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே ஜாமினில் உடனடியாக விடுதலையான இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நேற்று போலீசார் தன்னை கைது செய்த போது என்ன நடந்தது என்பதை விவரித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்று என்னை கைது செய்த போது எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை.. என் குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டு , இந்த பக்கம் திரும்பிய உடனே , ஒரு 8 பேர் வந்து. என் வீட்டு வாசலிலேயே என்னை அழைத்து சென்றார்கள். அவர்கள் லுங்கி, பனியன் அணிந்திருந்தார்கள்.. பக்கத்தில் உள்ள ராயபுரம் காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கிறோம் என்று கூறி தான் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்கள்.. ராயபுரம் காவல் நிலையம் தாண்டி, தாம்பரம் போகிறோம் என்று சொன்னார்கள்.. அதன்பிறகு திருச்சி அழைத்து சென்றார்கள்.
ஆனால் நான் கேள்வி கேட்டதற்கு எந்தவிதமான அடிப்படை பதில்களும் அளிக்கவில்லை.. எதுவுமே சாதகமாக நடக்கவில்லை.. என்ன நடக்கிறது என்று ஐந்து மணி வரைக்கும் எனக்கும் தெரியாது .. எங்கு கூட்டிச்செல்கிறோம் என்று என்னை அழைத்து செல்பவர்களுக்கும் தெரியாது.. ஐந்து மணிக்கு பிறகு தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அதற்கு பிறகு கோர்ட்டிற்கு அழைத்து சென்றார்கள்.. அங்கு வழக்கறிஞர் பாலு அண்ணன் அவர்கள் ஆஜராகினார். எனக்கு நீதித்துறை மூலமாக ஒரு நியாயத்தை வாங்கி கொடுத்தார்கள்.. நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை உடையவன் நான்.. அப்படி பேசியதற்கு காரணமே திருப்பதி லட்டு விஷயம் தான். அதை ஒரு முதல்வரே வெளியில் சொன்னார்.. அந்த தைரியத்தில் தான் நான் சொன்னேன்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications