ராஜராஜ சோழனை பற்றி பா.ரஞ்சித் பேசியது சரிதானா?... தமிழிசை விளாசல்
Recommended Video
சென்னை: ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில்,
ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார்.

கடும் எதிர்ப்பு
தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் என வைத்து கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தார்கள் என்றும் பேசினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
மேலும், இறையாண்மைக்கு எதிராகவும், சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ள பா. ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, திருப்பனந்தாள் போலீசார், இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரஞ்சித் கூறிய கருத்து தவறு
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

பதிலளிக்க கூடாது
அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்தது இயல்பான ஒன்று தான். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் பாஜக அதிமுகவை இயக்குகிறது எனக் கூறுவார்கள் என்றும், கூட்டணி தேர்தலுக்காக மட்டுமே; அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சி பதிலளிக்க கூடாது எனவும் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications
