கற்பூரம் கொளுத்தலன்னா தீவிரவாதின்னு சொல்லுவாங்க.. ராமர் கோயில் திறப்பு பற்றி இயக்குநர் பா.ரஞ்சித்
சென்னை: ராமர் கோயில் திறப்பு நாளான இன்று கற்பூரம் கொளுத்தவில்லை என்றால் நாமெல்லாம் தீவிரவாதிகள் என சொல்வார்கள் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ப்ளூ ஸ்டார் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் ராமர் கோயில் திறப்பு விழாவை குறிப்பிட்டு பேசினார். “இன்று மிகவும் முக்கியமான நாள். வீட்டில் கற்பூரம் கொளுத்தவில்லை என்றால் நாம் எல்லாம் இன்று தீவிரவாதிகள்தான். அந்த அளவுக்கு பயங்கரமாக போய்கொண்டு உள்ளது. ரொம்ப தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டு இருக்கிறது. இன்னும் 5 ஆண்டு, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமாக இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்ற பயம் உள்ளது.

அந்த மாதிரி ஒரு பயங்கரமான காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்னாடி நம்மை நாமே சரிபடுத்துவதற்கு, நமது மனதை பன்படுத்துவதற்கு, நமது மூளையில் ஏற்றி வைத்து இருக்கிற பிற்போக்குத் தனத்தையும், இங்கு தினம் தினம் சொல்லிக்கொண்டு இருக்கிற மதவாதத்தையும் நாம் அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கருவியாக கலை உள்ளது. அதற்காக கலையை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். நிச்சயமாக இந்த கலை என்பது மக்களிடம் எளிதில் சென்றடையும் கருவியாக உள்ளது.
மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பிற்போக்குத் தனத்தை இந்த கலை சரி செய்யும் என்று நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடுதான் இந்த கலையை நாம் கையாள்கிறோம். அந்த நம்பிக்கையோடுதான் நாம் வேலை செய்துகொண்டு இருக்கிறோம். நிச்சயமாக இந்தியாவை மோசமான காலத்திற்கு தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை எல்லோரும் செய்ய வேண்டும். இதை இந்தியா முழுக்க செய்வோம் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று ராமர் கோயில் திறப்பு விழா நடக்கிறது. அதை பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் ராமர் கோயிலுக்கான ஆதரவு, எதிர்ப்பு என்பதை மீறி இது போன்ற விசயமே நடக்கக் கூடாது என நினைப்பதே பெரிய பிரச்சனையாகி உள்ளது. ஒரு சிக்கலான சூழல் உள்ளது. மதசார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது என்பது கேள்விக்குறியாக கேட்க வேண்டி உள்ளது.
கோயில் கூடாது என்பது நம்முடைய பிரச்சனை அல்ல. பராசக்தியிலேயே ஒரு வசனம் உள்ளது. கோயில் கூடாது என்பதல்ல.. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதே நம்முடைய கவலை. அதன் அடிப்படையிலேயே பேசினேன். இந்தியாவில் இப்படி ஒரு கோயில் திறக்கிறார்கள் என்பதை கடவுள் நம்பிக்கையோடு பார்க்கலாம். அதை ஏன் அரசியலாக்க வேண்டும். திரௌபதி முர்மு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மோசமானது என்பதை நாம் பார்க்கிறோம். ராஜஸ்தானில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி புறக்கணிக்கப்பட்டு அதில் பிரசாதம் வழங்கக்கூடாது என்ற வந்த செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அந்த செய்தி உண்மையாக இருந்தால் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.” என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications