வேள்பாரி நாவலை அப்படியே காப்பி அடித்த பிரபல படம்.. இயக்குநர் ஷங்கர் வேதனை
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் கனவு படைப்புகளில் ஒன்றாக வேள்பாரி நாவல் உள்ளது. இந்தியன், கேம் சேஞ்சர் படங்களுக்கு மத்தியிலும் ஷங்கர் வேள்பாரி நாவலை படமாக்குவது தொடர்பான பணிகளில் உள்ளார். இந்நிலையில் வேள்பாரி நாவலின் காட்சிகளை எந்த அனுமதியும் இல்லாமல் அப்படியே தழுவி சமீபத்தில் வெளியான படங்களில் பயன்படுத்தியுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இந்தியன் 3, கேம் சேஞ்சர் படங்களில் பிஸியாக உள்ளார். இதனிடையே அவர் வேள்பாரி நாவலை படமாக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். மதுரை கம்யூனிஸ்ட் எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுத்தில், பிரபல வார இதழில் வேள்பாரி நாவல் வெளியானது. அப்போதிருந்தே அந்த நாவலுக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.தொடர்ந்து அது புத்தகமாக பிரசுரமான பிறகும் வரவேற்பு அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்த நாவல் இயக்குநர் ஷங்கருக்கு மிகவும் பிடித்தது. இதையடுத்து அவர் நாவலுக்காக காப்புரிமையை அதிகாரபூர்வமாக பெற்றார். அதேபோல நாவலை திரைப்படமாக எடுப்பது குறித்த ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்கான ஸ்க்ரிப்ட்டிங் வேலையில் இருந்த ஷங்கர், வேள்பாரி நாவலை மொத்தம் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். எப்படி இயக்குநர் மணிரத்னத்துக்கு பொன்னியின் செல்வன் பெயர் வாங்கிக் கொடுத்ததோ அப்படி ஷங்கரின் திரைப் பயணத்தில் வேள்பாரி நாவல் படம் முக்கியமானதாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
வேள்பாரி நாவலை படமாக்கினால் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ரூ .1,000 கோடி பட்ஜெட்டில், நடிகர்கள் சூர்யா, ரன்வீர் சிங், ராம்சரண், யாஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடிப்பதாக எல்லாம் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. அதுதொடர்பான அப்டேட்களை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஷங்கர் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து திரைப்பட இயக்குநர் ஷங்கர் தன் எக்ஸ் தள பக்கத்தில், "உங்கள் அனைவரின் கவனத்துக்கு. சு.வெங்கடேசன் எழுத்தில் புகழ்பெற்ற நவயுக நாயகன் வேள்பாரி சரித்திர நாவலுக்கான காப்பி ரைட்ஸ் என்னிடம் உள்ளது. அந்த நாவலில் உள்ள சில முக்கிய காட்சிகள், சமீபகாலமாக சில திரைப்படங்களில் எந்த அனுமதியும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனையை தருகிறது.
அதிலும் நாவலில் உள்ள மிக முக்கியமான காட்சி ஒன்றை சமீபத்தில் வெளியான திரைப்பட ட்ரெய்லரில் பயன்படுத்தியிருப்பதை பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன். அந்த நாவலில் உள்ள காட்சிகளை சினிமா படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். படைப்பாளிகளுக்கு மதிப்பளியுங்கள். உங்கள் படைப்புகளில் இதுபோன்ற, அங்கீகரிக்கப்படாத காட்சி தழுவல்களை தவிர்க்கவும். இதை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளார்.
சங்கரின் இந்தப் பதிவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல சமூகவலைதளங்களிலும் இந்தப் பதிவு வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. மேலும் ஷங்கர் குறிப்பிட்ட படம் எது என்று ரசிகர்கள் டி- கோட் செய்து வருகின்றனர். அதில் பலரும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள தேவரா படத்தை குறிப்பிட்டு வருகின்றனர். வேள்பாரி நாவல், தேவாரா படம் இரண்டிலும் கடல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் பலரும் அது தேவாரா படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
சிலர் அது சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அது என்ன படம் என்று வெளிப்படையாக கூறுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications