மருமகன் செய்த காரியம்.. தர்மசங்கடமான இயக்குநர் ஷங்கர்! பாலியல் வழக்குபற்றி ஓராண்டுக்கு பின் விளக்கம்
சென்னை: 16 சிறுமிக்கு எதிரான பாலியல் வழக்கில் சிக்கி போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்ட இயக்குநர் ஷங்கரின் மருமகனும் கிரிக்கெட் வீரருமான ரோகித், தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல தமிழ் இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகனும் கிரிக்கெட் வீரருமான ரோகித்துக்கும் திருமணம் நடைபெற்றது.
தாமோதரன் புதுச்சேரியில் கிரிக்கெட் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த கிளப்பின் அணியில் தாமோதரன் மகன் ரோகித் கேப்டனாக இருந்து வந்தார்.

சிறுமி
இவரது கிளப்பில் 16 வயது சிறுமி ஒருவர் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக சேர்ந்து இருக்கிறார். அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கிரிக்கெட் கிளப்பின் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது புகாரளித்து உள்ளார். அவர் மீது கிளப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரோகித் மீது போக்சோ வழக்கு
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் கிளப்பின் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் தாமோதரன், அவரது மகனும், இயக்குநர் ஷங்கரின் மருமகனுமான ரோகித், கிளப் செயலாளர் வெங்கட் உள்ளோட்டோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றத்துக்கு உடந்தை
இதில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் பிரிவிலும், ரோகித் உள்ளிட்ட மற்றவர்கள் மீது குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவாகரம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சமயத்தில் பெரும் விவாத பொருளானது. ஆனால், ரோகித் தரப்பில் அப்போது எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இன்ஸ்டாகிராமில் விளக்கம்
இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில், "எனக்கு அடையாளத்தையும், அங்கீகரத்தையும், நான் யார் என்று எனக்கு அறிமுகத்தையும் வழங்கி, வாழ்வின் சிறந்த துணையாக இருப்பது கிரிக்கெட் மட்டும்தான்.

மதிப்பை இழந்துவிட்டேன்
என்னுடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழும் கிரிக்கெட்டிற்கு நேர்மையாக இருக்க நான் விரும்புகிறேன். அண்மையில் நடந்த சம்பவங்களினால் மன அமைதியையும், இந்த துறையில் மதிப்பையும் இழந்துள்ளேன். இதன் காரணமாக அதிக துன்பத்தோடும் மன உளைச்சலுடனும் நான் வாழ்ந்து வருகிறேன்.

தற்காலிக ஓய்வு
நான் இதில் இருந்து மீண்டு வருவதற்கு என்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே நான் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். அவதூறுகளில் சிக்கிய எனக்கு ஆதரவாக நின்ற மனிதர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரும்பி வருவேன்
நான் சரியான நேரத்தில் திரும்பி வருவேன். என்னை உருவாக்கிய கிரிக்கெட்டிற்கும், என் மீது நம்பிக்கை வைத்து உட்ன நின்றவர்களுக்கு அன்பையும், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பதிவிட்டு இருக்கிறார். ஷங்கரின் மருமகன் பல மாதங்களுக்கு பிறகு அளித்துள்ள இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications