நம்ம மேலே வரக்கூடாதுனு அவ்வளவு வேலைகள் நடக்குது.. கல்வி விழாவில் வெற்றிமாறன்
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தமிழ்நாடு, தெலங்கானா முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் ஆகியோருடன் சினிமா இயக்குநர்கள் வைத்த கருத்துகளும் ஹைலைட்டானது. இயக்குநர் தியாகராஜன் குமாராஜா பேச்சு அதிகளவு கவனிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் பேச்சும் கவனத்தை ஈர்த்துள்ளது. கல்வியை நம்மிடம் இருந்து எடுக்க நுட்பமாக வேலை பார்க்கும் காலத்தில், அதை நுட்பமாகவே எதிர்க்கும் பணி நடந்து வருவதாக அவர் தமிழ்நாடு அரசை பாராட்டினார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் உள்ள முற்போக்கு இயக்குநர்களும் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, தமிழரசன் பச்சை முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி முக்கியம்
இதில் இயக்குநர் வெற்றிமாறன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் அம்மா ஆசிரியை ஆவார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில், நம்ம கிட்ட எது இருந்தாலும் எடுத்துப்பாங்க. ஆனா படிப்பை மட்டும் எடுக்கவே முடியாது என்று பேசிய வசனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், "சினிமா மேடையில் மட்டுமே பேசும் எனக்கு இது பெரிய மேடை. அதனால் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர், தெலங்கானா முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் வணக்கம். கல்வி நம் எல்லோருக்கும் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கல்வியை நம்மிடம் எடுக்க
தமிழ்நாட்டில் எப்போதுமே கல்விக்கு முக்கியத்துவம் இருந்துள்ளது. அம்மா - அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாப்பாடு சாப்பிட வழி இல்லை என்றாலும் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தமிழ்நாட்டில் அது 50 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது கல்வியை நம்மிடம் இருந்து எடுக்க சிஸ்டமேட்டிக்காக வேலை பார்க்கிறார்கள்.
அதை சிஸ்டமேட்டிக்காக எப்படி எதிர்க்க வேண்டும் என்பதுதான் கடந்த 4 வருடங்களாக நடைபெற்றுள்ளது. இந்த மேடையில் நாம் பார்த்த உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை எனக்கு மிகுந்த நெகிழ்வாக இருந்தது. கல்வியில் நாம் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். இது சாதாரண விஷயமல்ல.
மேல போக கூடாதுனு நிறைய வேலை
நாம் அங்கு போய்விடக்கூடாது என்பதற்கு அவ்வளவு வேலைகள் நடக்கிறது. ஆனாலும் நாம் அங்கு போவோம், எப்படி போக வைப்போம் என்கிற செயல் மிகவும் நன்றிக்குரியது. அந்த மாணவர்கள் போல நாம் எல்லோரும் நன்றியுடன் இருக்க வேண்டும். எல்லோரும் சொல்வதை போல காலை உணவு மிகவும் முக்கியம். அது பள்ளியில் கிடைக்கும்போது, அதற்காகவே பள்ளிக்கு வருவார்கள்.
பல பேர் பள்ளியுடன் நிறுத்திவிடுகிறார்கள். இந்த வருடம் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு சென்றது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார்கள். அந்தளவுக்கு திட்டங்கள், ஊக்கம், அதை செயல்படுவதற்கான ஆற்றல் மிகுந்த குழு கிடைத்திருப்பது நமக்கு மிகப்பெரிய பலம். முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இந்த அரசுக்கு மிகப்பெரிய நன்றி." என்றார்.












Click it and Unblock the Notifications