சென்னை ஜெயின் கோவில் அருகில் இறைச்சிக் கடையை அகற்ற கோரிய வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை மாநகராட்சியில் சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகில் நடத்தப்படும் இறைச்சிக் கடையை அகற்ற உத்தரவிடக் கோரி ஜெயின் கோவில் நிர்வாகம் கோரிக்கையை நிராகரித்தும் மனுவை தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டின் மிக பழமையான கோயில்கள் அருகே இறைச்சி கடைகள் இருக்காது.. மிக அபூர்வமாகவே சில இடங்களில் சிறிய கோயில்கள் அருகே இறைச்சி கடைகள் இருக்கும். இறைச்சி கடைகள் கோயிலுக்கு அருகே இருக்கக் கூடாது என்ற சட்டம் இல்லை என்றாலும் பொதுவாக இறைச்சி கடைகள் கோயில்களின் அருகில் திறக்கப்படாது.

இறைச்சி கடை மட்டுமல்ல, அசைவ உணவகங்கள் கூட பாரம்பரிய கோயில்களின் அருகில் பெரும்பாலும் இருக்காது. இதற்கு காரணம் என்னவென்றால், கோயில் அருகே அசைவ உணவுகள் சாப்பிடுவதையோ, அசைவங்களை வாங்குவதையோ விரும்ப மாட்டார்கள் என்பதால் இப்படி இருக்கும். அதேநேரம் சென்னையில் கோயில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் இறைச்சி கடைகள், அசைவ உணவகங்கள் இயங்குகின்றன.
இந்நிலையில் சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகில் அமைந்துள்ள இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிடக் கோரி, அந்த கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோவில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது நீதிமன்றம் எப்படி உத்தரவிடமுடியும் என கேள்வி எழுப்பி இருந்தனர். பின்னர் மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு இன்று தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவாகரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக தெரிவித்த, மனுதாரர் தரப்பு வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications