பொன்முடிக்கு போதாத காலமா? அறிவாலயம் சொல்வது என்ன? ஸ்டாலின் மீது அதிருப்தியா?
சென்னை: அமைச்சர் பொன்முடி தனக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கிடைக்காமல் போகலாம் என்று ஏன் சூசகமாகத் தெரிவித்தார் என்பதற்காக விளக்கத்தை அறிவாலய வட்டாரத்திலிருந்து திரட்டியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் அமைச்சர் பொன்முடி. ஆனால், அந்த சீனியர் அமைச்சர் சில மாதங்களாகச் சர்ச்சையான தலைப்புச் செய்திகளில் அதிகம் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் பட்டியலிலிருந்த அவர், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்குப் பின்னால் நெருங்க முடியாத நண்பராக ஸ்டாலினுக்கு மாறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கியது, அவரது சொத்துகள் முடக்கப்பட்டது. அதன்பின்னர் அமைச்சர் பதவியை இழந்தது. மறுபடியும் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விடாப்பிடியாக ஆளுநர் ரவியுடன் மோதி அமைச்சரானது என கடந்த ஒரு வருடமாகவே அவர் நிலை கட்சிக்குள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்கிறார்கள்.
மேலும், சமூகநீதி, பெண்கள் உரிமை என ஸ்டாலின் பேசி வரும் காலத்தில் அரசு கொண்டு வந்த சில திட்டங்களை அவர் கொச்சைப்படுத்திப் பேசியது தொடர்பாக ஸ்டாலினுக்கு மன வருத்தம் இருந்தது. முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு தனக்கு தூக்கத்தைக் கெடுக்கும்படி சில சீரியர் அமைச்சர்களே நடந்துகொள்கிறார்கள் என நொந்துபோய் பொது மேடையில் ஒரு எச்சரிக்கை விடுத்தார் என்றால் அது பொன்முடிக்காகத்தான்.
ஆனால், அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவர் யாரையோ சொல்கிறார் என்பதைப் போல அதே மேடையில் அமர்ந்து கொண்டு கைதட்டினார். ஆக, இப்படி அரசு ரீதியாகவும் அலுவல் ரீதியாகவும் பொன்முடி பல குடைச்சல்களை முதல்வர் ஸ்டாலினுக்குக் கொடுத்து வந்தார் என்பதை முன்பே பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.
சொல்லப்போனால் கருணாநிதியின் வலுவாக கரங்களில் ஒருவராக இருந்த பொன்முடி, அவரது மறைவுக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றே உபிகள் பலர் நம் காதில் செய்தியை அள்ளி போடுகிறார்கள். குறிப்பாக உதயநிதியின் முக்கியத்துவத்தை மறைமுகமாக எதிர்த்தவர்கள் பட்டியலில் துரைமுருகனுக்கு அடுத்து பொன்முடி இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்றைய திமுகவில் செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கூட பொன்முடிக்கு இல்லை என்பதே நிஜம் என்கிறார்கள்.
அவரை மறைமுகமாக எச்சரித்து வந்த முதல்வர் அமைச்சரை மாற்றத்தின் மூலம் பொன்முடியைக் கீழே இறக்குவார் என யாருமே யோசிக்கவில்லை. அவ்வளவு ஏன் பொன்முடிக்கே தனது இலக்கா மாற்றப்படும் விவகாரம் இறுதிவரை தெரியவில்லை. அந்தளவுக்கு சீக்ரெட் ஆக இருந்து செய்து முடித்துள்ளார் ஸ்டாலின்.
முன்பே ஆளுநர் ரவியுடன் மோதல், முதல்வருடன் மனஸ்தாபம் என இருந்த பொன்முடிக்கு இறுதி இடியாக தலையில் இறங்கிய செய்திதான் அமைச்சரவை மாற்றம். உயர்க் கல்வித்துறை என்பது அதிகாரம் மிக்க ஒரு இலக்கா. அதிலிருந்து வனத்துறை அவருக்கு வழங்கப்பட்டது என்பது பெரிய அடி. இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பே பல மன நெருக்கடிகளிலிருந்த பொன்முடி, இப்போது கட்சியின் மீதும் ஸ்டாலினின் மீதும் அளவுகடந்த அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள்.
அதன் வெளிப்பாடே அவர் விழுப்புரம் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய பேச்சு என்றும் சொல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில், 'அதிகாரத்தில் சொல்லவில்லை. அறிவுரையாக இதை சொல்கிறேன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எனக்கே கூட சீட்டு கிடைக்காமல் போகலாம். விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளில், விழுப்புரம், திருக்கோவிலூர்,செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய 4 மட்டுமே திமுக வசம் உள்ளது. மீதியுள்ள வானூர், திண்டிவனம், மயிலம் ஆகிய 3 தொகுதிகளும் நம் கையில் இல்லை. ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 7 தொகுதிகளையும் திமுக வென்று எடுக்க வேண்டும்.
இந்தத் தொகுதிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார்? என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். உதயநிதி முடிவு செய்வார். கருத்து வேறுபாடு வராமல் கூட்டணிக் கட்சிகள் யார் போட்டியிட்டாலும் நாம் அவர்களை வெற்றி பெற வைக்கவேண்டும். வரும் தேர்தலில் யாருக்குச் சீட்டுக் கிடைக்கும் என்பது தெரியாது. ஒருவேளை எனக்கே கூட சீட்டு கிடைக்காமல் போகலாம்’ என்று போகிற போக்கில் தன் ஆதங்கத்தை ஒருவரியில் கொட்டி கவிழ்த்திருக்கிறார் பொன்முடி.
இவர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவரது மகன் கெளதம சிகாமணி விழுப்புரம் தெற்கு திமுக மாவட்டச் செயலாளராக இருக்கிறார். வரும் தேர்தலில் பொன்முடி தொகுதி மாறி நிற்க முடிவு செய்துள்ளார். இப்போது தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவிலூரை மகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, அவர் விழுப்புரம் தொகுதியில் நிற்க இருக்கிறார் என்ற பேச்சு அடிப்படுகிறது. ஒரு பக்கம் தொகுதி மாற போவதைத்தான் இவர் இப்படி மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.
மற்றொரு பக்கம் வேறு கதை சொல்கிறார்கள். ஐ.பெரியசாமி அமைச்சராக இருக்கிறார். அவரது மகன் செந்தில்குமார் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். பெரியசாமியைப் போலவே சீனியர்தான் பொன்முடி. இரண்டு பேரும் திமுக துணைப் பொதுச்செயலாளர்கள்தான்.
ஆனால், ஸ்டாலின் தனது மகனுக்கு மட்டும் கட்சி பதவி மட்டுமே வழங்கி இருக்கிறார். ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்று இருக்கிறது முதல்வரின் செயல்பாடு என நெருங்கிய நட்பு வட்டத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பொன்முடி என்று ஒரு தகவலைத் தட்டி விடுகிறது அறிவாலய வட்டாரம்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications