கொடைக்கானல் பஸ்களில் பயணம் செய்ய ஆதார் கட்டாயம்.. யார், யார் போகலாம்?.. முழு விவரம்!
சென்னை: கொடைக்கானல் பஸ்களில் பயணம் செய்ய ஆதார் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூலை 5-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கேற்ப கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 23 மாவட்டங்களில் இன்று முதல் பஸ்கள் ஓடத் தொடங்கியுள்ளன..

எந்தெந்த ஊர்கள்
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் பஸ்கள் இயங்க தொடங்கின.

இ-பாஸ் வேணும்
அதே வேளையில் சுற்றுலா தலங்களான நீலகிரி மாவட்டம், குற்றாலம், ஏலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக மட்டுமே செல்ல வேண்டும் என்றும், அதற்கும் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்த மாவட்டங்களுக்கு பயணிகள் இ-பாஸ் பெற்றே சென்று வருகின்றனர்.

ஆதார் கட்டாயம்
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அரசு தடை விதித்து உள்ளதால் கொடைக்கானல் பஸ்களில் பயணிக்க ஆதார் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நடத்துனரிடம் காட்ட வேண்டும்
அதாவது கொடைக்கானலில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட வெளியூர் செல்லும் மக்கள் ஆதார் அட்டை காண்பித்த பிறகே பயணம் செய்ய முடியும். உள்ளுர் மக்களாக இருந்தாலும் ஆதார் அட்டை காண்பித்த பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.இதேபோல் திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு பயணம் செய்ய வேண்டுமானால் ஆதார் அட்டை காண்பிக்க வேண்டும்.

வெளியூர் பயணிகள்
அதில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ள மக்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும். பஸ்கள் புறப்படும் முன்பு நடத்துனரே ஆதார் அட்டையை சரிபார்த்தது பஸ்களில் ஏறுவதற்கு அனுமதிக்கிறார். அப்படி வெளியூர்காரர்கள் இருந்தால் உரிய விவரங்கள் கேட்ட பின்னரே பஸ்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications