சென்னை, ஆவடியை சுத்துப்போட்ட போலீஸ்.. 22,000 பேர் குவிப்பு! தீபாவளியையொட்டி டிஜிபி சொன்ன மேட்டர்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை, ஆவடி பகுதிகளில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். கார், அரசு பஸ், ஆம்னி பஸ்களில் மக்கள் நேற்று இன்று கூட்டம் கூட்டமாக கிளம்பினர்.

இதனால் சென்னையில் ஜிஎஸ்டி சாலை உள்பட பல முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்கின்றனர்.
இதற்கிடையே தான் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரயில், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர். மக்கள் சிரமமின்றி பயணிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி சாலை, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடி, இசிஆர் சாலைகளில் போக்குவரத்து சரிசெய்ய 300 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபட உள்ளனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர சென்னை சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் ஆவடி மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications